Sunday, July 29, 2007

பாற்கடல் கடையும் பத்திரிக்கைகள்

கவிஞர் தாராபாரதி

நூலறி வுக்குத் துணைசெய் யாமல்
நூற்றுக் கணக்காய் நம்நாட்டில்
பாலுற வுக்குப் பரிந்துரை செய்யப்
பத்திரி கைகள் பெருகிவரும்.

கத்தரி களுக்குத் தப்பிய காட்சி
பத்திரி கைகளில் வருகிறது;
சித்திரம் சிறுகதை நாவல் களிலே
சிற்றின் பம்தான் பெருகியது!

ஆணெழுத் தாளர் எழுது கோல்களில்
ஆடைகட் டாத எழுத்துக்கள்;
பெண்ணெழுத் தாளர் பிடித்திருந் தாலும்
நாணமில் லாத பேனாக்கள்!

உடலை மட்டும் வரைந்து விட்டு
ஒதுங்கிக் கொள்ளும் தூரிகைகள்;
உடையை அதன்மேல் மூடுவ தற்கு
ஒப்புக் கொள்ளா ஆசிரியர்!

துச்சா தனராய் இவர்கள் கூடித்
துகிலை பறித்து விடுகையிலே
அச்சு வாகனம் பருத்தி ஆலையா
ஆடை கட்டி விடுவதற்கு?

மூடியை திறந்தால் பேனா கூட
முகத்தைக் கவிழ்த்துக் கொள்கிறதே!
ஆடையைத் திறக்க அலையும் விரலோ
அதையே துணைக்கு அழைக்கிறதே!

பால்போல் வெள்ளைத் தாளை இவர்கள்
பாற்கடல் என்று கடைகின்றார்;
பாற்கடல் நஞ்சை வாசகக் கன்றுகள்
பருகுவ தற்குத் தருகின்றார்!

அழுக்கில் லாத கதைநா யகியை
அடிக்கடி குளிக்க வைக்கின்றார்;
நிழலில் நடத்தும் உடலுற வுக்கு
`நேர்முக வர்ணனை' செய்கின்றார்!

போதையைத் தூண்டும் மாத நாவல்கள்
பொழுதைப் போக்கும் வியாபாரம்;
ஆதர வளிக்கும் வாலிபத் தொகுதியில்
அச்சுக் காகித விபச்சாரம்!

அன்னை நாட்டில் அன்னிய நாட்டின்
அடையா ளங்களைப் பதிக்கின்றார்;
தன்னை வள்ர்க்கும் எழுது கோலின்
தர்மங் களையே துறக்கின்றார்!

மண்ணில் எழுதிக் கற்ற விரல்கள்
மண்ணின் மரபை மறப்பதுவோ?
கண்ணில் வளர்ந்த பண்பா டுகளைக்
கண்ணிமை வந்து எரிப்பதுவோ?

கள்ளிச் செடியை வளர்க்கத் தானா
காகித வயலில் `மைவிதைகள்'?
பள்ளி யறையும் குளிய லறையும்
மட்டும் தானா வீட்டறைகள்?

ஒழுக்கம் உயிரெனப் பேசும் நாட்டில்
உடல்கள் தானா மூலதனம்?
அழுக்கை விற்றுச் செல்வம் திரட்டும்
அந்தப் பலபேர் எந்தஇனம்?

பள்ளத் திற்குள் படிப்பவன் இருந்தால்
படைப்பா ளிக்குக் களியாட்டம்;
`கள்ளின் விசிறிகள்' உள்ள வரைக்கும்
காய்ச்சுப வர்க்குக் கொண்டாட்டம்!

நன்றி: இது எங்கள் கிழக்கு

No comments: