என் முதல் காதல்

என் முதல் காதல் அவளோடு
சில நேரங்களில் பகலிலும்,
பல நேரங்களில் இரவு மின்னல்
ஒளியிலும் அவள் முகம்
பார்த்திருக்கிறேன்

என் மேல் விழுந்து
மெய்சிலிர்க்க வைத்து
என் உதடு வழி தாகம்
தீர்ப்பவள்
விவரம் தெரியும் முன்பிலிருந்தே
அவளை எனக்கு தெரியும்
பார்க்கும்போது மட்டும் பரவசம் அடைவேன்
கைப்பேசி காதலுக்கு அவள்
ஊரில் வசதியில்லை
நாங்கள் பேசிக் கொள்வது
வருடத்துக்கு சில நாள்கள்
மட்டும்தான்
அவள் வரும்போது முத்தமிட்டும்
காகித கப்பல் விட்டும்
விளையாடுவது உண்டு
அது …. ? இது …..?
சீ …… சீ ….
அப்படியொன்றும் இல்லை.
அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று
நான் புனிதம் காக்கிறேன்.
அவள் என்னை விட்டு
பிரியும்போது எனக்கு
உடல் நலம் சரியில்லாமல் போகிறது
அவள் வருவதைப் பார்த்தால்
எங்கள் வீட்டில் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.
அவளைப் பற்றி கவிதை எழுத
நினைப்பதுண்டு
அவளே கவிதை
அவளைப் பற்றி என்ன
எழுதுவது....
எப்போது திருமணம்?
பொறுங்கள், குழந்தைகளைக் கேட்டு சொல்கிறேன்.
குழந்தைகளா?
இப்பொழுது அவர்கள் தான்
அவளைக் காதலிக்கிறார்கள்.
குழந்தைகள் காதலிக்கிறார்களா...
ஆமாம் மழையை காதலிக்காத
மழலை யாராவது உண்டா?
இப்போது அவர்களுக்கும்
புரிகிறது அவள் மென்மையானவள்
அல்ல கோபப்பட்டால் கொலையும்
செய்வாள் என்று....

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்ப விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு – சீமான் அறிக்கை.

 

ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி லத்திகாசரண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.


இன்றைய நிலையில் இலங்கையின் சூழலும் இந்தியாவின் சூழலும் பதட்டம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த இரு நாடுகளிலுமே குடுமப சர்வாதிகார ஆட்சியின் கீழ் மக்கள் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் சூழலோ அறிவிக்கப்படாத மிசா காலத்தைப் போன்று இருக்கிறது. கருணாநிதி குடும்பத்தின் அடக்குமுறையின் கீழ் மக்கள் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது .இருபது லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் வருகிற பொங்கள் கண்ணீர் பொங்கலாக இருக்குமோ என்று கலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள்.

இயற்கை அனர்த்தனத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களுக்கோ, உடமைகளுக்கோ உரிய இழப்பீடுகள் இன்றி விழி பிதுங்கி நிற்கும் விவசாயிகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வரலாறு காணாத‌ விலை உயர்வு ஏழைகளை பட்டினியில் விளிம்பிற்குத் தள்ளி விட்டது. முற்றிலுமாக நிலை குலைந்து விட்ட ஒரு மக்கள் விரோத நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் சூட்டப்பட்ட மகுடம் போல ஸ்பெக்ட்ரம் ஊழல் இருக்கிறது.விலைவாசி குறித்தோ, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகள், மக்கள் குறித்தோ கவலைப்படாமல் இளைஞன் பட விழாக் கொண்டாட்டத்தில் குஷியாக இருந்த கருணாநிதி பல ஆயிரக்கணக்கான கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தினம் தோறும் சி,பி.ஐ சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றி வரும் நிலையில் பதறிப் போகிறார். இந்த ரெய்டுகளுக்கு காரணமான டில்லி காங்கிரஸ்காரர்களை கண்டிக்க வக்கற்ற கருணாநிதி அவர்களைக் குஷிப்படுத்தவும்,மக்களின் கவனத்தில் இருந்து பிரச்சனையை திசை திருப்பவும் விடுதலைப்புலிகள் ஊடுருவி தன்னையும், பிரதமரையும் கொல்ல திட்டமிட்டிருப்பதாக காவல்துறையை ஏவி அறிக்கை வெளியிடுகிறார். ஒட்டு மொத்தமாக தமிழக மக்களுக்கு திமுக மீதும் கருணாநிதி மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும் நோக்கில் ஈழத் தமிழர்களின் வாழ்வை பணையம் வைத்து காங்கிரசார் தன் மீது சுமத்திய களங்கத்தை போக்க‌, ஏலகிரியில் இருந்து எழுதிய திரைக்கதையை இப்பொழுது காவல்துறை மூலம் வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்த இவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்காக அவர்களை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர்.விடுதலைப்புலிகளால் இவர்களின் உயிருக்கு ஆபத்து அல்ல.இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டி (37) காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.


தனது எம்.பி. பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார். அவரது தாயும் ராஜசேகர ரெட்டியின் மனைவியுமான விஜயம்மாவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஜெகன் மோகனின் இந்த திடீர் முடிவால் ஆந்திரத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஜெகன் மோகன் ரெட்டி விலகல் ஆந்திர அரசியல் ஒரு திருப்பமாக கருதப்படுகிறது.

காங்கிரஸ் தலைமை தன்னை இழிவுபடுத்தி,அவமானப்படுத்தியதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஜெகன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்து கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

ஜெகன் மோகனின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது, தவறான வழிகாட்டுதலின் பேரில் அவர் இந்த முடிவு எடுத்துள்ளார் என்று மத்திய சட்ட அமைச்சரும், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி கூறினார்.

அதேநேரத்தில், ஜெகன் மோகன் விலகியதால் ஆந்திர அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ எந்த நெருக்கடியும் இல்லை. தனி மனிதரைவிட கட்சி பெரியது என்று அவர் கூறினார்.

ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை கட்சி மேலிடம் முதல்வராக்கும் என்று ராஜசேகர ரெட்டி குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் மூத்த தலைவர் ரோசய்யா முதல்வராக்கப்பட்டார்.


இதனால் அதிருப்தி அடைந்த ஜெகன்மோகன் தனது ஆதரவாளர்களைத் திரட்ட, கட்சி தலைமையின் உத்தரவையும் மீறி ஆறுதல் யாத்திரையைத் தொடங்கினார். தனது தந்தை உயிரிழந்தபோது தற்கொலை செய்து கொண்டவர்கள், அதிர்ச்சியில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கான யாத்திரை என்ற பெயரில் அவர் ஆந்திர முழுவதும் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். அதோடு முதல்வர் ரோசய்யாவுக்கு மறைமுகமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தனது சாட்சி பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலம் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை விமர்சித்து வந்தார்.


ஜெகன் மோகன் கொடுத்த நெருக்கடி, தெலங்கானா தனி மாநில போராட்டம் போன்ற காரணங்களால் முதல்வர் பதவியிலிருந்து விலக ரோசய்யாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சட்டப் பேரவைத் தலைவராக இருந்த கிரண் குமார்ரெட்டி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜெகன் மோகனின் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கைகளில் கட்சி மேலிடம் ஈடுபட்டது. அதற்கேற்ப ராஜசேகர ரெட்டியின் சகோதரருக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது.

ஏற்கெனவே தனது சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டியை முதல்வராக்கியதோடு தனது சித்தப்பா ஓய்.எஸ். விவேகானந்த ரெட்டிக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்ததால் கட்சியில் இருந்து விலக முடிவு செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி.

புதிய கட்சி


விரைவில் அவர் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சியை தனது தந்தையின் பெயரைக் கொண்டு "ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்' என தொடங்க உள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.



சோனியா மீது புகார்



சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், தனது சித்தப்பாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பது மூலம் தனது குடும்பத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். உங்களை (சோனியா) சந்திக்க நேரம் கேட்டு எனது தாய் விஜயம்மா ஒரு மாதமாக காத்திருந்த நிலையில் நடிகரும், பிரஜா ராஜ்யத் தலைவருமான சிரஞ்சீவி உங்களைச் சந்திக்க நேரம் கேட்டபோது உடனடியாக சந்தித்தீர்கள். இது எங்களை அவமானப்படுத்தியதாகும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



அரசு தப்புமா?



ராஜசேகர ரெட்டி மரணமடைந்தபோது 140-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது 25 எம்.எல்.ஏ.க்களே ஜெகன் மோகனை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டாலே கிரண்குமார் ரெட்டி அரசு கவிழ்ந்துவிடும். ஆனால் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யத்தின் 18 உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது.
 
நன்றி: தினமணி
 
 

ஈழ விடுதலை: திருமாவளவன் பேச்சு


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் "தொல்.திருமாவளவன் கவிதைகள்' என்ற நூலின் ஆங்கில மொழியாக்கம் 'Thirst' , வெளியீட்டு மையம் சார்பாக மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தொகுத்த தொல். திருமாவளவன் உரைத் தொகுப்பு நூல் "ஈழ விடுதலைக்களம்', தமிழர் இறையாண்மை மாநாட்டுச் சிறப்புப் பாடல் இசைவட்டு "எழுச்சித் தமிழ்' ஆகியவற்றின் வெளியீட்டு விழா, வெளியீட்டு மையம் சார்பாக, சென்னை, அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்திலுள்ள அரங்கத்தில், 26.11.2010 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.


பாவலர் இன்குலாப்,பாவலர் தணிகைச்செல்வன், கவிக்கோ அப்துல் ரகுமான், பாவலர் அறிவுமதி வெளியிட, இயக்குநர் அமீர், எழுத்தாளர் இரவிக்குமார், கவிஞர் இனிமை நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு
கருத்துரையாற்றினார்கள். இக் கூட்டத்தில்  திருமாவளன் பேசும் போது
தமிழினத்தை தலைநிமிரவைத்த போராளி மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாளை இன்று உலகமே கொண்டாடி மகிழ்கிறது அவரின் பிறந்தநாளை வெளிப்படியாக வெளிச்சம் போட்டு கொண்டாடுவதற்கான வாய்ப்பில்லாத ஒரு களமாக இன்றைக்கு தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கிறது. எனினும் விடுதலைச் சிறுத்தைகள் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஈழம் விடுதலைப் பெற வேண்டும் என்ற கருத்தியலை அடைக்காக்கிற வலிமையும் வாய்ப்பும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உண்டு. அக்கருத்தை சிதைந்து போகவிடாமல் பாதுகாத்து முன்னெடுத்துச்செல்கிற கடமை இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அதற்கான கலப்பணிகளை விடுதலைச்சிறுத்தைகள் செய்து வருகின்றது என்றும் பேசினார்.

ஈழம் அடைவதே நமது பாரிய கடமை ! - சீமான் மாவீரர் தின அறிக்கை

     எனக்குள் உயிராக இருக்கும்  
         என் தாய்த்தமிழ் உறவுகளே 

                 நவம்பர் 27 -மாவீரர் நாள். மனித குல வரலாற்றில் மகத்தான தியாகங்களை புரிந்து வியத்தகு சாதனைகளை செய்து வித்தாகிப்போன எமது தமிழ்த்தேச விடுதலைப் போராளிகளை நினைவு கூறும் வீரத்திருநாள். வரலாற்றில் மூத்த தமிழ்க்குடிக்கு காலம் அளித்த கொடையான தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய பாதையில் தம்மை மனமுவந்து ஒப்படைத்துக்கொண்ட அந்த விடுதலை வேங்கைகளை நினைவு கூறும் உன்னத நாள்.

           “ தமிழினம் சிதைந்து அழிந்து போகாமல்  
        பாதுகாப்பாக வாழ்வதற்கு போராடித்தான் 
        வாழவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு 
        தமிழ்த்தேசம் தள்ளப்பட்டிருக்கிறது.  
        இந்த தேசிய பணியிலிருந்துஇ வரலாற்றின் 
        அழைப்பிலிருந்து தமிழ் இளம் பரம்பரை 
        ஒதுங்கிக்கொள்ளமுடியாது .
       - என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றுக்கமைய களமாடி விதையான 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களை போற்றும் புனித நாள். 

      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் பெருவளத்தான் காவிரியில் கல்லனை எழுப்பியபோது தமிழன் பெருமை உலகை சென்றடையவில்லை. எமது முப்பாட்டன் ராசராசனும் அவனது அருமை மகன் ராசேந்திரனும் கடல்கடந்து சென்று பல தேசங்களை வென்றபோதும் தமிழனின் புகழ் உலகத்தாரால் கவனிக்கப்படவில்லை.கற்பனைக்கெட்டாத எமது மாவீரர்களின் ஈகமே தமிழன் என்றோர் இனமுண்டுஎன்பதை உலகமறியச் செய்தது.


   
   
    “ உயிர் உன்னதமானது ;
     விடுதலை உயிரை விட உன்னதமானது
          -என்றார் தேசியத்தலைவர்இ அந்த வகையில் விடுதலைக்காக உயிர்த்துறந்தவர்கள் நமது மாவீரர்கள்.
    ஆண்ட பரம்பரை மாண்டு போவதா?
    ஆளப்பிறந்தவன் அடிமையாவதா?
    வீரத் தமிழினம் வீழ்ந்து போவதா?
    வீனர்க் கூட்டம் நம்மை ஆள்வதா?
    -என்று நம்மில் எழும் இவ்வினாக்களுக்கு விடையாகத்தான் நம் மாவீரர்கள் உயிரைக் கொடையாக கொடுத்து போராடினார்கள்.
     நாம்
     சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே
     அவர்கள்
     சுவாசித்தக் காற்றை நிறுத்திக் கொண்டார்கள்.
     அன்னைத் தமிழீழம் அன்னிய சிங்களனிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நமது வீரவேங்கைகள் உயிர் நீத்தார்கள்.
  
     “அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காக சாவதே மேலானது
     -என்ற கொள்கை முழக்கத்திற்கு ஏற்பவே அவர்கள்  வீரச்சாவை தழுவிக் கொண்டார்கள்.

     ஈழ விடுதலை என்பது ஈழத்தில் வாழ்கிற இ வாழ்ந்த இ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கான விடுதலை மட்டுமல்ல இ அது உலகெங்கும் பரவி வாழ்கின்ற 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களுக்குமான தேச விடுதலை. ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை.

     தமிழீழ விடுதலை என்பது தலைவர் பிரபாகரன் அவர்களின் சொந்த இலட்சியமோ தனிப்பட்ட விருப்பமோ அல்ல இ ஒட்டுமொத்த தமிழ்த்  தேசிய இன மக்களின் ஆன்ம விருப்பத்தின் வெளிப்பாடே தனித்தமிழீழ அரசுஇ தமிழ்த் தேசிய மக்களின் அந்த ஆன்ம விருப்பத்தை நிறைவேற்றவே நமது தேசியத் தலைவர் அவர்கள் விடுதலைப்புலிகள்என்ற தமிழீழ தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடினார்.
 
      எமது மக்களின் இந்த விருப்பத்தினை புரிந்துகொள்ளாத சர்வதேச சமூகம் சிங்கள பேரினவாத அரசின் பொய்யான பரப்புரையினை நம்பி நமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமென சித்தரித்து சிங்கள பேரினவாத அரசினுடைய அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது.

      தற்பொழுது  தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றுத் தேக்கமொன்றில் வந்து நிற்கிறது. இனத்தின் விடியலுக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் யுத்தகளத்தில் வீழ்த்தப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்புகளின் மீது விழுந்த மிகப் பெரிய அடியாகும்.  இந்த பின்னடைவுக்கான  புறக்காரணங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில்  முக்கியமானவையாக சிங்கள அரசின் இனவாதத்திற்கு  இந்திய சீன ஏகாதிபத்தியங்களின் உதவி மேற்கத்திய நாடுகளின் ஆதரவுஇ ஐ.நா.சபையின் பொறுப்பற்ற தன்மை  ஆகியவையாகும். அதிலும் குறிப்பாக விடுதலைப் போராட்டம் இன்று வந்தடைந்திருக்கும் தேக்கத்திற்கு மேற்கத்திய நாடுகள் பின்னணியில் இருந்து பெருமளவு இலங்கை அரசுக்கு உதவியிருக்கின்றன.

        நார்வே அரசை நடுநிலையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதேஇ பெருமளவிலான நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று கூறித் தடைவிதித்துஇ புலிகளின் பலத்தைப் பெருமளவு குறைத்தன. ஐ.நா.சபையோ இலட்சக்கணக்காகன மக்கள் மீது கிளஸ்டர் குண்டுகள்இ பாஸ்பரஸ் குண்டுகள்இ பொழிந்து தாக்கப்பட்டபோது அகதிகளாய் தமது வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்பட்;ட போது அங்கங்கள் சிதறி ஊனமடைந்து துடித்தபோது பசியில் சிறுகச் சிறுகச் செத்து மடிந்தபோது வெறுமென அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்யாமல் போர் முடிந்தது.என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தபோது மட்டும் பொது வெளிக்கு வருகிறது.

       தொடர்ச்சியான 30 வருடப் போரின் இறுதியில் இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குப் பின்னர் பல்லாயிரம் போராளிகளின் உயிரிழப்புக்குப் பின்னர் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட பிறகு போரின் கொடுமைகளைக் கண்ணால் பார்த்து மனம் பேதலித்து சில இலட்சக்கணக்கானவர்கள் எஞ்சியிருக்கும் ஒரு மண்ணில் அவர்களுக்கான நியாயம் எப்படி யாரால் வழங்கப்படப் போகிறது ?

          “ எமது தேச விடுதலை என்பது எதிரியால்
      வழங்கப்படும் சலுகையல்லஇ அது ரத்தம்
      சிந்தி உயிர் விலை கொடுத்து போராடிப்
      பெறவேண்டிய புனித உரிமை
     -என்ற நமது தேசியத்தலைவர் அவர்களின் கூற்றுக்கமைய எண்ணற்ற உயிர் விலையினை கொடுத்தே உலகின் மனசாட்சியை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் நிலை இன்று எழுந்துள்ளது.

     உலகம் முழுவதும் பரவலாக வாழும் தமிழர்கள் இன்று வீதிக்கு வந்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள.; இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையாக அறியப்பட்டு வந்த தமிழர்களின் பிரச்சனை இன்று சர்வதேசம் முழுவதும் பேசப்படும் பெருளாக மாறி  இருக்கிறது. போராட்டங்கள் வேறு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவிலும் இது நமக்கு சாதகமான விசயமாகும். வன்னிக்காட்டில் நடந்த யுத்தம் இன்று உலகின் வீதிகளில் எதிரொலிக்கிறது.
       
      “போராட்ட வடிவங்கள் மாறலாம் ;
       போராட்ட இலட்சியங்கள் மாறுவதில்லை
  - என்ற நமது தேசியத்தலைவர் அவர்களின் கூற்றுக்கமையவும்.

     “ யுத்தம் என்பது இரத்தம் சிந்துகிற அரசியல் ;
               அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்
  -என்ற புரட்சியாளர் மாவோ அவர்கள் சொன்னதைப் போலவும் நாம் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தத்திற்க்கு தயாராக வேண்டிய தருணம் வந்துவிட்டது.

     1½ கோடி சிங்களனிடம் 12 கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை அண்டிப்பிழைக்கும் அவலநிலை உருவானதற்கு காரணம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை. சாதிகளாக மதங்களாக பிரதேசங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறான்.

     இந்த நிலையிலிருந்து விடுதலையடையாமல் இனத்தின் விடுதலை சாத்தியமில்லை. நாம் தமிழர்என்ற உணர்வை பெற்று பேரினமாக ஒன்றிணையாத வரை நம் விடுதலையை வென்றெடுக்க வாய்ப்பில்லை.
   “ தமிழர் ஒன்றானால்
     வாழ்வு பொன்னாகும்
     இல்லையேல்
     மண்ணாகும்.
     -என்பதனை இந்த நிலையிலாவது புரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியவன் நான் பெரியவன் என்ற வேறுபாட்டை களைந்து இனம் பெரிதுஇ இனத்தின் மானம் பெரிது என்ற எண்ணம் வளர வேண்டும் .

     இன்றைக்கு இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு இ போர்க் குற்றம் புரிந்த நாடு என்ற உண்மையை பல்வேறு நாடுகள் புரிந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவால் ஐ.நா.அவை இலங்கை போர்க்குற்றம் குறித்த ஒரு விசாரணை குழுவை நியமித்திருக்கிறது. நாம் நம்மை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு அனைத்து ஆதாரங்களையும் திரட்டி ராசபட்சேவுக்கு தண்டணை வாங்கித்தர வேண்டும் என்ற உறுதி ஏற்கவேண்டும். இதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான சர்வதேச ஆதரவு சக்திகளை திரட்ட வேண்டும். எம் தமிழின மக்களைக் கொன்றொழித்தவர்களுக்கு இந்தியாவில் துணை நின்ற சக்திகளை விரைவில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த அணிவகுப்போம் என்ற சபதம் ஏற்க வேண்டும்.

      மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க போராடவேண்டும். புலிகள் மீதான தடை என்பது தமிழ்த் தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட ஒரு அவமானமாகும். இந்த தடையால் வாழ வழியின்றி புலம்பெயர்ந்து வருகிற எமது மக்களை ஏதிலிகளாக ஏற்க மறுக்கிற ஒரு நிலை  நீடிக்கிறது. எனவே தடையை நீக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
     
     உன்னதமான இலட்சியத்திற்காக உயிர்த் தியாகம் செய்த நம் மாவீரர்களை நினைவு கூறும் இன்றைய நாளில் நாம் ஏற்றுகிற ஈகச்சுடர் மீது சத்தியம் செய்து உறுதி ஏற்க வேண்டும். இதுவே அளப்பரிய அர்ப்பணிப்பு செய்த அந்த தியாக சீலர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான வீரவணக்கமாக அமையும்.

 நமது தேசியத் தலைவர் கூறியது போல
         “ சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால்
      சாதாரணமானவனும் சரித்திரம் படைக்க முடியும்.
       அவ்வாறு சாகத்துணிந்து சரித்திரமானவர்கள் நம் மாவீரர்கள் .

        எங்கள் மாவீரர்களே !
        உங்கள் இரத்தத்தால் நமது தமிழினத்தின் விடுதலை
        வரலாறு மகத்துவம் பெறுகிறது.
        உங்கள் இலட்சிய நெருப்பில் தமிழினப் போராட்டம்
        புனிதம் பெறுகிறது.
        அளப்பரிய உங்கள் தியாகத்தால் தமிழ்த்தேசியம்
        உருவாக்கம் பெறுகிறது
        உங்கள் நினைவுகளை போற்றுவதால் எங்கள்
        உறுதி மேலும் மேலும் உறுதியாகிறது.

       தாயகக் கனவுடன்
       சாவினைத் தழுவிய
       சந்தனப் பேழைகளே !
       எம் விடுதலைக்கான
       வீர விதைகளாக
       விழுந்த மாவீரர்களே !
       எந்த இலட்சியத்தை எம்மிடம் கையளித்து சென்றீர்களோ அதனை நிறைவேற்றும் வரை உறுதியாக  நின்று இறுதிவரை போராடுவோம் என்ற உறுதியோடு எங்களின் வீர வணக்கத்தை செலுத்துகிறோம் .
    
      வீரவணக்கம் ! வீரவணக்கம் !!
      எங்கள் மாவீரர்களே வீரவணக்கம் !
      நீங்கள் சிந்திய குருதி
      ஈழம் மீட்பது உறுதி ! 

  நன்றி: நாம் தமிழர் இயக்கம் வலைத்தளம்

                                           
                                                                           சீமான்
                                                              தேசியப் பாதுகாப்பு கைதி
                                                                    நடுவண் சிறை
                                                                            வேலூர்.

உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் அமையும்:வைகோ

சென்னை தியாகராய நகரில் 27-11-2010-இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியது.

அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் கிளிநொச்சியில் பேசியகூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது.28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப்புலிகள் பலியானதை அப்போது குறிப்பிட்டார்.

பல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரச்சாரம் நடக்கிறது. இது நீடிக்காது.

முத்துக்குமார் போன்ற தியாக இளைஞர்களின் கனவு வீண்போகாது. இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது. அங்குள்ள அகதிகள் முகாமில் 30 ஆயிரம் பேர் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ராஜபக்சே 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக கூறுகிறார்.

ஒவ்வொரு முகாமில் இருந்து இன்னொரு முகா முக்குதான் மக்களை மாற்றுகின்றனர்.

தமிழர் பகுதியில் 100 மீட்டருக்கு ஒரு சிங்கள ராணுவ முகாம் உள்ளது. அங்கு சிங்கள குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிவன், முருகன் கோவில்கள் பவுத்த ஸ்தலமாக மாறுகிறது. தமிழர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறிய பிறகு ராணுவத்துக்கு அங்கு என்ன வேலை?

ஏற்கனவே என்மீது இறையான்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்கு உள்ளது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனாலும் நான் அஞ்சுவதில்லை. விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். இதன் பொருட்டு எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

தொடர்ந்து மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. அதற்கான பலன் வெகுவிரைவில் கிடைக்கும். பீகார் தோல்வி இதில் முதல் கட்டமாக வந்துள்ளது.

காந்திய வழியில் போராடிய பிறகுதான் ஈழத்தமிழர்கள் தனிநாடு தீர்வுக்கு வந்தனர். அதன்பிறகு அடக்கு முறை அதிகமானதால் ஆயுதம் ஏந்தினர். தமிழ்ஈழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தாய் தமிழகம் அவர்களுக்கு உறுதியாக இருக்கும்.

பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்’’என்று தெரிவித்தார்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஸ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல அமெரிக்க எழுத்தாளன் ஜான் ரீட் மாஸ்க்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோப்பர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள்.
படைப்பாளிகள்,கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலை நிறுத்திக்கொண்டவர்கள். வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது என்று நிரூபித்தவர்கள்.
சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.
தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலை செய்தும், பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும் சரணடைந்தவர்களை சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்கள பயங்கரவாத அரசு.
யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. நடைபெற்ற இந்த இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார்கள்.
தமிழர்களின் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறி சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தர செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியற் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில், கலை, இலக்கியம், விளையாட்டு கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியை சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் இன்னொரு முனையாகவே 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நோக்கப்படுகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களைப் பங்குபற்ற வைப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தனது பக்கமே என்ற தோற்றத்தினை அரசு ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு நாம் பலியாகக்கூடாது.
சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களை கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மகாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால் சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது. சிறிலங்கா பயங்கரவாத அரசினால் உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கு அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை.
இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் இரத்தச் சுவடுகளின் மீது, எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீது நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகள், கலைஞர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.
நீதியின்மேல் பசிதாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.