Wednesday, October 1, 2008

அக்டோபர் 2-ம்தேதி முதல் புகைபிடிக்க தடை


காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம்தேதி முதல் நாடு முழுவதும் புகைபிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பிறப்பித்துள்ளார்.

மத்திய கலால், வருமான வரி, விற்பனை வரி, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகளின் ஆய்வாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது இடங்களிலும் யார் புகைபிடித்தாலும் நடவடிக்கை எடுக்கலாம்.

ரயில் நிலையம் மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் ரயில் நிலைய அதிகாரிகள், துணை நிலைய அதிகாரி, தலைமை நிலைய அதிகாரி, நிலைய பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

அரசு அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதற்கு இணையான அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயக்குநர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தபால் நிலையங்களில் தபால் நிலைய அதிகாரிகள், தனியார் அலுவலகங்களில் தலைமை நிலைய அதிகாரிகள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், கல்வி நிலையங்களில் கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.

நூலகங்கள், வாசகர் அறைகளில் நூலகர், துணை நூலகர், நூலக பொறுப்பாளர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், விமான நிலையங்களில் விமான நிலைய மேலாளர்கள், அதிகாரிகள், அனைத்து பொது இடங்களிலும் பொது சுகாதாரத் துறை இயக்குநர்கள், மத்திய, மாநில பொறுப்பு அதிகாரிகள், புகையிலைக் கட்டுப்பாடு மாநில, மாவட்ட நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தமது செய்தியில் தெரிவித்துள்ளார்.

Thursday, June 12, 2008

கவலைக்கிடமான நிலையில் அணுசக்தி ஒப்பந்தம்

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற உள்நாட்டு அரசியல் தடுக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அயல்நாட்டு பணிக்கு நியமிக்கப்பட்ட இந்திய அதிகாரிகளை தனது வீட்டில் சந்தித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது தேச நலன் காக்கப்பட்டுள்ளது. நமது பாதுகாப்புக்காக அணு சக்தியைப் பயன்படுத்த அந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு நிறைவேற்ற நமது உள்நாட்டு அரசியல் தடுக்கிறது. இனி வரும் மாதங்களில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அணு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான எரிபொருளை மற்ற நாடுகள் இந்தியாவுக்குத் தருவதில்லை. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே மற்ற நாடுகளிடம் இருந்து எரிபொருளை வாங்க முடியும். எனவேதான் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை உருவாக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ரஷியா, பிரான்ஸ் போன்ற அணுசக்தி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் நாடுகளுடனும் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

எண்ணெய் வளம்:

உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் எண்ணெய் வளம் முக்கிய பங்கு வகிக்கும். எண்ணெய் வளம் இருக்கும் நாடுகளைத் தேடி சீனா செல்கிறது. அந்த போட்டியில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடிக்க அங்கெல்லாம் சீனா முதலீடு செய்கிறது.

எண்ணெய் வளத்தை பெறுவதும், உலகின் அதிகாரப் போட்டிகளில் மிக முக்கியமானதாகிவிடும். இப்போது கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதுபோன்ற சிக்கலை உலக நாடுகள் இதுவரை சந்தித்ததில்லை. பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் எண்ணெய் வளத்தைப் பெறுவதற்காக நாடுகளிடையே கடும் போட்டி அதிகரிக்கும். இயற்கை வளம், எண்ணெய் வளம், மின்சாரம் ஆகியவை வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக அமையும்.

எரிசக்தி துறையில் சீனாவிடம் இருந்து இந்தியாவுக்குக் கடும் போட்டி ஏற்படும் என்பதை உணர வேண்டும். வளர்ச்சிக்கான போட்டியில், தேச நலனை நாம் எப்படி காத்துக் கொள்ளப் போகிறோம் என்பது அவசியம் என்றார் மன்மோகன் சிங்.

ஆனால் அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் விடுவதாக இல்லை. அமெரிக்கா நம்பத் தகுந்த நாடு கிடையாது என்று அக் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இந்த ஒப்பந்தம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

Tuesday, May 20, 2008

மே-22 வரை உயர்கல்வி கண்காட்சி

பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக உயர்கல்வி கண்காட்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இக் கண்காட்சி 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடை பெறுகிறது.

இக் கண்காட்ச்சியில் இப் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலை வாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
விளக்கக் கையேடுகள், கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இக் கண்காட்சியில் வழங்குவதற்கு நிர்வாகத்தின்ர் முடிவு செய்துள்ளனர். மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன.
பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக இக் கண்காட்சி நடைபெறுகிறது.

Monday, May 19, 2008

அரசியல் களம்-ரஜினிகாந்தை பாராட்டும் அன்புமணி

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சி இல்லாமல் நடிக்கும் நடிகர் ரஜினிகாந்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பாராட்டினார். ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த 2 படங்களிலும் (சிவாஜி, சந்திரமுகி) புகை பிடிக்கும் காட்சி இல்லை என்று கூறி ரஜினிகாந்தை அன்புமணி புகழ்ந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியை ஹிந்தி நடிகர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அன்புமணி அறிவுரை கூறினார்.

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியைத் தவிர்க்குமாறு ஹிந்தி நடிகர்களுக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு ஹிந்தி திரையுலகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. திரைப்படங்கள் கலைப் படைப்பு இதில் அமைச்சர் தலையிடக் கூடாது என்று கண்டித்தனர். பிரபல நடிகர் அமிதாபச்சன், ஷாரூக்கான் வெளிப்படையாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவர்களுக்கு சுட்டிக்காட்டும் வகையில் ரஜினியை புகழ்ந்து பாராட்டி உள்ளார் அன்புமணி.

ரஜினி ஸ்டைலாக புகை பிடிப்பதால் அதனால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பலர் அந்த பழக்கத்துக்கு அடிமையாகிவிடுகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
ரஜினிகாந்தை கடுமையாக குறை கூறினார். குறிப்பாக பாபா படம் வெளிவந்தபோது அதில் ரஜினி ஸ்டைலாக புகை பிடிப்பார். அதை ராமதாஸ் கடுமையாக விமர்சித்தர். தற்போது
அன்புமணி சமீபத்தில் வெளியான் ரஜினியின் இரு படங்களிலும் புகை பிடிக்கும் காட்சி இல்லை என்றார் அன்புமணி.

Tuesday, May 13, 2008

காதல் கவிதை

கவிஞர் தாராபாரதி

இதயம் நீயே என் வானம்-உன்
இமைக்கு கீழே என் குடிசை;
உதயம் உனது பூ விழியில்-என்
உலகம் உனது காலடியில்.

முதலில் பார்த்த ஒரு கணத்தில்-நான்
முந்தைய பிறவி தொடர்பறிந்தேன்;
புதுமையான உணர்ச்சியடி-இது
போன பிறவி சொந்தமடி.

கூர்மையான நுன்னறிவு-உன்
குழந்தைப் பேச்சு பிடிவாதம்;
நேர்மையான நன் நடத்தை-உன்
நெஞ்சம் முழுதும் தன்னடக்கம்.

குனத்தில் எனது நகலானாய்-உயர்
கொள்கையில் எனது அச்சானாய்;
மனதில் எனது நினைவானாய்-உயிர்
மங்கை எனது நிழலானாய்.

Saturday, May 3, 2008

ஷேக்ஸ்பியரின் காதல் தத்துவம்

மூளை என்பது நமக்கு கிடைத்த
மிகப்பெரிய கொடை. அது
24 மணி நேரமும்,
வருடத்துக்கு 365 நாள்களும்
வேலை செய்கிறது.
சரியாக காதலிக்கும்போது மட்டும்
வேலை செய்வது கிடையாது.

Friday, May 2, 2008

நீதித்துறையில் இடஒதுக்கீடு:ராமதாஸ்


தமிழக மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய பரிந்துரைகள், நீதித்துறையில் இடஒதுக்கீடு வழங்க வழிவகுத்துள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நமது அரசியல் சட்ட செயல்பாட்டினை ஆராய்ந்த நீதிபதி வெங்கடாசலய்யா குழு பரிந்துரை செய்தது. அது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுபோல் சுதர்சன நாச்சியப்பன் குழு அறிக்கையை கிடப்பில் போடக் கூடாது.

விலைவாசி உயர்வு: விலைவாசி உயர்ந்திருப்பதை மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால் மத்திய அரசுதான் காரணம் என்று மாநில அரசுகளும், மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் கூறி வருகின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
தமிழக நிதி அமைச்சர், விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம் காரணமல்ல, பணப்புழக்கம் அதிகரித்துள்ளதே காரணம் என்று கூறியுள்ளார். பணப்புழக்கம் அதிகரித்திருந்தால் 28 சதவிகித மக்கள் ஏன் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள்.
ஏழை, எளிய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவில்லை. கறுப்பு பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. கிராமங்களில் 10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் ரூ.10 லட்சத்துக்கு வாங்கப்படுகிறது. இதனால் நடுத்தர சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சமையல் எண்ணெய் போன்றவற்றுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டும் விலை உயர்ந்துள்ளது. மணிலா விவசாயிகளிடம் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்கின்றனர்.
விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்க வழி செய்ய வேண்டும். விவசாயிகள் நாங்கள் வாழ்வதா? சாவதா? என்று கேட்கின்றனர். விதைகள், உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம்.

வேலையில்லாத் திண்டாட்டம்: வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற் சாலைகள் தேவை. ஆனால் வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறிக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து 49.59 லட்சம் இளைஞர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன. இத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அடிக்கடி அறிவிப்புகளும் வெளிவருகின்றன.
இந்த அறிவிப்புகளை கூட்டிப்பார்த்தால் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். வேலை வேண்டி காத்திருக்கும் 50 லட்சம் பேரில் ஒரு லட்சம் பேருக்காவது வேலை கிடைத்திருக்குமா?.
தரமணியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்க அரசு நிலம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஆனால் மகாபலிபுரம் சாலையில் ஐ.டி. தொழில் நுட்ப பூங்காவுக்காக 3.5லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட தளங்கள் காலியாக உள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக காலியாக இருக்கும் தளங்களுக்கு செல்லாமல், காலியாக இருக்கும் இடங்களை குறி வைக்கிறார்கள். தொழில் நுட்ப பூங்கா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது.
ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எத்தனை? இதனால் வேலைவாய்ப்பு பெற்றோர் எவ்வளவு பேர்? இவர்கள் யார்? என்பது குறித்து சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஹைதராபாத்தில் கிரீன்வேஸ் ஏர்போர்ட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 1999-ல் முடிவெடுக்கப்பட்டும் அவை செயல்படுத்தப்படவில்லை. இதை செயல்படுத்த வேண்டும். புதிய தொழிற்சாலைகள் தொடங்கும்போது பின்தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு தொடர்பாக பாஜக நடத்தும் பந்த் போராட்டத்துக்கு பாமக ஆதரவு அளிக்காது.

டி.ஆர்.பாலு விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் பெட்ரோலியம் துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Wednesday, April 30, 2008

வள்ளலார் தத்துவம்

புண்ணைக் கட்டி அதன் மேல்-ஒரு
புடவை கட்டி புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக் கொள்வார்-இவர்
கொள்ளிவாய் பேயைக் கட்டிக்கொண்டாலும் பிழைப்பார்
மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற-இம்
மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக் கொண்டு ஊர் வழிப்போகும்
கிழக் கழுதைவாழ்விலும் கடையெனல் ஆகுமே!

விளக்கம்: எலும்பின் மீது சதையைக் கட்டி, அதற்கு மேல் ஒரு புடவையை கட்டிக் கொண்டு புதுமைகள் காட்டிடும் பெண்ணைக் கட்டிக்கொள்வார், அவர் கொள்ளிவாய் பேயைக் கட்டிக் கொண்டாலும் பிழைப்பார். மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற இம் மடப் பிள்ளைகள் வாழ்க்கையை பார்க்கும் போது, கழுதைமீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப்போல் உள்ளது. அதுவும் கண்ணைக் கட்டிக் கொண்டு செல்லும் கிழக்கழுதை மீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப் பார்ப்பது போல் உள்ளது என்கிறார் வள்ளலார்.

Monday, April 28, 2008

எஸ்.எம்.எஸ் காதல் கவிதை

உன் கொலுசு சத்தம் கேட்டு
பிறந்த என் கவிதைகள்-உன்
மெட்டிச் சத்தம் கேட்டு இறந்தன.

Tuesday, January 8, 2008

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து

புதுவை கோ.சுகுமாரன்

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை அடைந்தது. வரும் பிப்ரவரி 4-ஆம் நாளன்று இலங்கையின் 60-ஆவது விடுதலை நாள் விழா கொழும்பில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக கலந்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், பிரதமர் இலங்கைச் செல்வதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைச் செல்வதைக் கைவிட வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியில், இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன.
கடந்த 31-12-2007 அன்று சென்னையில் தி.க. சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், திராவிடத் தமிழர் கழகத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் இதனை வலியுறுத்தினர்.
இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (06-01-2008) செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்றைய தினம் முக்கிய பணி இருப்பதால் இலங்கை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டார் என்று தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு, தமிழகக் கட்சிகள் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும், இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெற உள்ள 'சார்க்' மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்வார் என்று தெரிய வருகிறது.