Friday, May 2, 2008
நீதித்துறையில் இடஒதுக்கீடு:ராமதாஸ்
தமிழக மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய பரிந்துரைகள், நீதித்துறையில் இடஒதுக்கீடு வழங்க வழிவகுத்துள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நமது அரசியல் சட்ட செயல்பாட்டினை ஆராய்ந்த நீதிபதி வெங்கடாசலய்யா குழு பரிந்துரை செய்தது. அது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுபோல் சுதர்சன நாச்சியப்பன் குழு அறிக்கையை கிடப்பில் போடக் கூடாது.
விலைவாசி உயர்வு: விலைவாசி உயர்ந்திருப்பதை மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால் மத்திய அரசுதான் காரணம் என்று மாநில அரசுகளும், மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் கூறி வருகின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
தமிழக நிதி அமைச்சர், விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம் காரணமல்ல, பணப்புழக்கம் அதிகரித்துள்ளதே காரணம் என்று கூறியுள்ளார். பணப்புழக்கம் அதிகரித்திருந்தால் 28 சதவிகித மக்கள் ஏன் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள்.
ஏழை, எளிய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவில்லை. கறுப்பு பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. கிராமங்களில் 10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் ரூ.10 லட்சத்துக்கு வாங்கப்படுகிறது. இதனால் நடுத்தர சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சமையல் எண்ணெய் போன்றவற்றுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டும் விலை உயர்ந்துள்ளது. மணிலா விவசாயிகளிடம் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்கின்றனர்.
விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்க வழி செய்ய வேண்டும். விவசாயிகள் நாங்கள் வாழ்வதா? சாவதா? என்று கேட்கின்றனர். விதைகள், உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம்.
வேலையில்லாத் திண்டாட்டம்: வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற் சாலைகள் தேவை. ஆனால் வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறிக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து 49.59 லட்சம் இளைஞர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன. இத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அடிக்கடி அறிவிப்புகளும் வெளிவருகின்றன.
இந்த அறிவிப்புகளை கூட்டிப்பார்த்தால் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். வேலை வேண்டி காத்திருக்கும் 50 லட்சம் பேரில் ஒரு லட்சம் பேருக்காவது வேலை கிடைத்திருக்குமா?.
தரமணியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்க அரசு நிலம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஆனால் மகாபலிபுரம் சாலையில் ஐ.டி. தொழில் நுட்ப பூங்காவுக்காக 3.5லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட தளங்கள் காலியாக உள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக காலியாக இருக்கும் தளங்களுக்கு செல்லாமல், காலியாக இருக்கும் இடங்களை குறி வைக்கிறார்கள். தொழில் நுட்ப பூங்கா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது.
ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எத்தனை? இதனால் வேலைவாய்ப்பு பெற்றோர் எவ்வளவு பேர்? இவர்கள் யார்? என்பது குறித்து சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஹைதராபாத்தில் கிரீன்வேஸ் ஏர்போர்ட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 1999-ல் முடிவெடுக்கப்பட்டும் அவை செயல்படுத்தப்படவில்லை. இதை செயல்படுத்த வேண்டும். புதிய தொழிற்சாலைகள் தொடங்கும்போது பின்தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு தொடர்பாக பாஜக நடத்தும் பந்த் போராட்டத்துக்கு பாமக ஆதரவு அளிக்காது.
டி.ஆர்.பாலு விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் பெட்ரோலியம் துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment