Saturday, October 30, 2010

விடுதலைப்புலிகளை எக்காலத்திலும் அழிக்க முடியாது என்று சென்னையில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் வாதிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய போதிய காரணங்கள் உள்ளனவா? தடையை விலக்கிக் கொள்ளலாமா? என்பதை விசாரிக்க சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது. விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசு தரப்பின் சார்பில் சிவகங்கை மாவட்ட கியூ பிரிவு ஆய்வாளர் சந்திரசேகரன், கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், சென்னை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முகமது அஷ்ரப் மற்றும் திண்டுக்கல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா?

நீதிபதி விக்ரம்ஜித் சென், "விடுதலைப்புலிகள் அமைப்பு இருக்கிறதா அழிக்கப்பட்டு விட்டதா?'' என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த வைகோ, "விடுதலைப் புலிகளை எக்காலத்திலும் முற்றிலுமாக அழித்துவிட முடியாது. அவர்கள் லட்சியத்தை வெல்வார்கள்'' என்று கூறினார். இதே கருத்தை பழ. நெடுமாறனும், வழக்கறிஞர் சந்திரசேகரனும் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் பாஸ்கரன், நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது வைகோ எழுந்து, "அக் கூட்டத்தில் சீமான் இலங்கையில் தமிழர்கள் சிங்கள அரசால் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். அதைக் கண்டிக்கிறேன் என்று பேசியது சாட்சிக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். சாட்சி, "தெரியும்!'' என்று சொன்னார். அதேபோன்ற கருத்தை மற்றொரு பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதனால் கைது செய்யப்பட்டு தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியுமா?" என்று கேட்டார். சாட்சியோ தனக்குத் தெரியாது என்று சொன்னார்.

முன்னதாக, தீர்ப்பாய கூட்டத்திற்கு வந்திருந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மட்டுமே முறையிடலாம். அவர்கள் சார்பில் வைகோவும், பழ.நெடுமாறனும் ஆஜராக அனுமதிக்க கூடாது என்று நீதிபதியிடம் வாதிட்டார்.

டெல்லியில் நவ 1-ல் விசாரணை:

அதற்கு நீதிபதி விக்ரம் ஜித், "அவர்களை ஆஜராக அனுமதிக்கவில்லை, கருத்து சொல்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வேண்டுமானாலும் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்'' என்றார். உடனே சுப்பிரமணிய சாமி, "மத்திய மந்திரி ஆ.ராசா தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி செல்ல வேண்டியுள்ளது. எனது கருத்துகளை மனுவாக சமர்ப்பிக்கிறேன்," என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

தீர்ப்பாயத்தின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் நடக்கிறது.

நிச்சயம் தடை அகலும்! - வைகோ

விசாரணை முடிந்து வெளியில் வந்த வைகோ, "நிச்சயம் புலிகள் மீதான தடை அகலும் நம்புகிறேன். புலிகளுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் இப்போது யாராலும் கூற முடியாது. எனவே தடை நீங்கும். இந்தியா வரும் ஈழத் தமிழரின் இன்னலும் நீங்கும்," என்றார்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஸ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல அமெரிக்க எழுத்தாளன் ஜான் ரீட் மாஸ்க்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோப்பர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள்.
படைப்பாளிகள்,கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலை நிறுத்திக்கொண்டவர்கள். வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது என்று நிரூபித்தவர்கள்.
சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.
தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலை செய்தும், பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும் சரணடைந்தவர்களை சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்கள பயங்கரவாத அரசு.
யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. நடைபெற்ற இந்த இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார்கள்.
தமிழர்களின் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறி சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தர செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியற் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில், கலை, இலக்கியம், விளையாட்டு கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியை சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் இன்னொரு முனையாகவே 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நோக்கப்படுகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களைப் பங்குபற்ற வைப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தனது பக்கமே என்ற தோற்றத்தினை அரசு ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு நாம் பலியாகக்கூடாது.
சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களை கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மகாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால் சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது. சிறிலங்கா பயங்கரவாத அரசினால் உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கு அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை.
இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் இரத்தச் சுவடுகளின் மீது, எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீது நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகள், கலைஞர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.
நீதியின்மேல் பசிதாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

Friday, October 22, 2010

சீறும் பாடலாசிரியர் தாமரை

"ஈழப் பிரச்னைக்காகப் போராடியவர்களில் ஒருவர் நீங்கள்.   மே 18-க்குப் பிறகு, 'இந்த  எல்லாப் போராட்டங்களும் வீண்' என்ற அயர்ச்சி ஏற்பட்டதா?"
  "போரோடு முடிந்து விடவில்லையே ஈழத்துக் கொடுமைகள். முள்வேலி முகாம் கொடுமைகள், சரண் அடைந்தவர்கள் சித்ரவதை, பாலியல் வதை, கொடூரக் கொலைகள், தமிழர் நிலம் சிங்களமயமாக்கல் என்று இன்னமும் தொடர்கின்றனவே. புண் பட்டுக்கிடந்தால் வேலைக்கு ஆகாது என்று துள்ளி எழுந்து, இலங்கைப் புறக்கணிப்பு, போர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவது தொடர்பாக முன்னிலும் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஈழம்... என் நெஞ்சில் ஆறாத, மாறாத காயம்!"
"இன்றைய இந்திய காங்கிரஸ் அரசின் போக்கு குறித்து?" 
"இந்திய காங்கிரஸ் அரசு யாருக்காக எப்படி எல்லாம் செயல்படுகிறது, எப்படிப் பெருங் குழுமங்களுக்கு ஏவல் செய்கிறது என்பதை அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார்கள். நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஏதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, இது தமிழினத் தைக் கருவறுக்கப் புறப்பட்ட அரசு. தமிழி னம் வாழ வேண்டும் எனில், தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸை அடியோடு ஒழித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு செல்வாக்கு இருக்கும் வரையில்தான், இரு பெரும் கழகங்களும் மாறி மாறி அதைத் தோளில் சுமக்கவும், அதற்காகத் தமிழனைக் காட்டிக்கொடுக்கவும் போட்டியிடும். தமிழர் நலன், தமிழ்நாட்டின் உரிமைகள் இவற்றை முன்னிறுத்தினால் மட்டுமே, தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையைத் தோற்றுவிப்பது நம் கையில் உள்ளது. அதற்கு முதல் வேலை, காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதுதான். நல்ல வாய்ப்பாக சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெல்லக் கூடாது என்பதை மனதில்கொள்வோம்!" 
"ஈழப் பிரச்னையில் கருணாநிதி - ஜெயலலிதா இருவரின் நிலைப்பாடு குறித்த உங்கள் கருத்து என்ன?" 
"ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, பிணக் குவியல்களின் மீது ஏறி வெறியாட்டம் போட்ட காங்கிரஸின் குருதிக் கறை படிந்த கையை இறுகப் பற்றி, அதை இழந்துவிடக் கூடாதெனத் துடிப்பவர் கருணாநிதி. அந்தக் கையை எப்படியாவது கைப்பற்றத் துடிப்பவர் ஜெயலலிதா. 'ஆமாண்டா, அப்படித்தான் செய்வேன், உன்னால முடிஞ்சதைப் பாரு' என்று தெனாவெட்டாகக் காட்டிக்கொடுப் பார் ஒருவர். 'ஐயகோ, என் செய்வேன், அழிகிறதே என் தமிழினமே!' என்று அழுது கொண்டே காட்டிக்கொடுப்பவர் இன்னொ ருவர். இருவருக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு? சாயலில் வேறுபட்டாலும், சாரத்தில் இருவரும் ஒன்றுதான்!" 
"'ஈழப் போராட்டத்தின் தோல்வி (அ) பின்னடை வுக்கு எது அல்லது, யார் காரணம் என்று கருதுகிறீர்கள்?" 
"சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, ஆதரவு கொடுத்து, உலக நாடுகள் தலையிட்டுக் காப்பாற்றி விடாமல் தடுத்து, வேவு பார்த்து, வழிகாட்டிக் கூட்டுச் சதி செய்து, இனப் படுகொலைப் போரைப் பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம்! எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம்! இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம்! இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றா மல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம்!" 

Tuesday, October 5, 2010

சமீபத்தில் கேட்ட ஈழத்து மாணவனின் குரல்

எம் தேசம் தமிழ் ஈழம் ஈழத்தமிழராகிய எங்களின் தாய் தேசம். தமிழர் நாம் சீரும் சிறப்போடும் வாழ்ந்த தேசம். பல கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் புலவர்கள் வாழ்ந்த மண். வீரம் செறிந்த அரசர்களான சங்கிலியன் பண்டாரவன்னியன் போன்றோர் வாழ்ந்தமன். இலங்கையின் வடக்கிலு...ம் கிழக்கிலும் தமிழ் மன்னர்கள் ஆட்சிசெய்கையில் தெற்கில் சிங்களவர்கள் குடியேறினர். பல நூறு ஆண்டுகளாய் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இறுதியாக பிரித்தானியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. பிரித்தானியர்கள் தங்களின் ஆட்சிமுறையை சுலபமாக்க தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வடக்கு கிழக்கையும் (தமிழீழம்) சிங்களவர்கள் வாழ்ந்த தெற்கு மேற்கையும் ஒன்றாக இணைத்து ஸ்ரீலங்கா எனப் பெயரிட்டு ஒருநாடாக ஆட்சி செய்தனர் . பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்தது. பிரித்தானியர் இலங்கையை விட்டு செல்கையில் சிங்களவர்களிடம் ஆட்சியை விட்டுச்சென்றனர். அன்று முதல் சிங்களவர் தமிழர் மீதான அடக்குமுறையை மெல்லமெல்ல கட்டவிழ்த்தனர். தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது அகிம்சைப்போராட்டங்கள் சிங்கள காடையர்களால்வன்முறையின்மூலம் அடக்கப்பட்டது. சிங்களவனுக்கு அகிம்சை புரியாது என்பதை சிலவருடங்களின்பின்பே தமிழர் புரிந்துகொண்டனர். அடக்குமுறையை அடக்குமுறையின்மூலமேஎதிர்கொள்ளமுடியும் என ஆயுதப்போராட்டத்தை துடிப்பும் தமிழ்ப்பற்றும் கொண்ட இளம்தலைமுறை ஆரம்பித்தது. ஆயுதப்போராட்டம் பலபோராளிகுழுக்கழாக பல்வேறு பெயர்களில் பல்வேறு கொள்கைகளுடன் இயங்கியது. பலர் பின்பு தமிழர் உரிமைக்கான தமது போராட்டக் கொள்கையில் இருந்து விடுபட்டு. தமிழ் மக்களுக்கே தீங்கிலைத்தனர், இந்தியா பல போராளிக்குழுக்களுக்கு பயிற்ச்சியளித்தது அவர்களை தமது கட்டுப்பாட்டில் தமது நலனுக்காக பயன்படுத்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவின் கபடத்தனத்தை புரிந்து அவர்களின் பிடியில் இருந்து விலகினர். இதைப் பொறுக்காத இந்தியா உளவுப்பிரிவான ரோ மற்றைய போரளிக்குளுக்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. பல போராட்டக் குழுக்கள் ஒட்டுக்குழுக்களாக மாறியது. ஸ்ரீலங்கா இனவாத சிங்களராணுவத்தையும் இரக்கமற்ற இந்தியராணுவத்தையும் துரோகிகளான ஒட்டுக்குளுக்களையும் தாண்டி. எமது விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் எமது தமிழீழ தாயகத்தின் பல பகுதியிலிருந்து சிங்களப் படைகளை விரட்டியடித்து பல நூறு ஆண்டுகளின் பின். தமிழீழ மண்ணிலே தமிழர் தம்மை தமிழரே ஆண்ட சரித்திரம் படைத்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்மக்கள் நின்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தனர். தமிழீழ மக்களுக்காக தமிழர் தாயகத்தில் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தமிழீழ விவசாய பொருண்மியம், தமிழீழ மீன்வளத்துறை, சுய தொழில் ஊக்குவிப்புத்திட்டம், கால்நடை வளர்ப்புத்திட்டம் போன்றவை தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டங்களுக்கு மக்கள் முதலீடு செய்வதற்க்கு தமிழீழ மக்கள் வங்கி கடனுதவி செய்தது. மக்களின் போக்குவரத்துக்கு இலகுவாக தமிழீழ போக்குவரத்து திணைக்களம் அமைக்கப்பட்டது. தாயகத்தில் மிகமிக குறைந்த அளவில் அரிதாக சிறு சிறு குற்ற செயல்கள் இடம்பெற்றது. அதனைத்தடுக்க தமிழீழ காவல்த்துறை நியமிக்கப்பட்டது. பிற்காலத்தில் காவல்த்துறை விரிவாக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து பிரிவு, சுங்கவியல் பிரிவு, குற்றப்பிரிவு, விசாரனைப்பிரிவுகளாக பல பரிமாற்றம் கண்டது. தமிழீழ நீதிமன்றில் சர்வதேச சட்டங்களுக்கு நிகரான சட்டங்கள் வகுக்கப்பட்டு தமிழீழத்தில் நீதி நிலைநாட்டப் பட்டது. தமிழீழ சட்டத்தை கற்ப்பிக்க தமிழீழச் சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டது. இதில் பலர் தமது பட்டப்படிப்பை நிறைவுசெய்து சட்டவல்லுனர்களாக சிறந்துவிளங்கினர் தமிழீழ மாணவர்களின் கல்விக்கு தமிழீழ கல்வித்திணைக்களம் பல உதவிகளைசெய்தது. தமிழீழத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழீழ வங்கியில் கணக்கு திறக்கப்பட்டு பணம் வைப்பிலிடப்பட்டதுதமிழீழ மக்களின் வாழ்க்கை போர்ச்சூழ்நிலையிலும் நின்மதியாக இருந்தது. அவர்கள் பொழுதைக்கழிக்க பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மாவீரர்நாள், கரும்புலிகள்நாள் மக்களால் ஒற்றுமையுடனும் எழுச்சியுடனும் நினைவுகூரப்பட்டது. அத்துடன் கேணல் கிட்டு, தியாகி திலீபன், அன்னை பூரணி, இரண்டாம் லெப்டினன்ட் மாலதி போன்ற பல போராளிகளினதும் தியாகிகளினதும் நினைவுதினங்கள் மக்களால் நினைவுகூரப்பட்டது. தமிழீழ மக்கள் சுதந்திரிமாக வாழ்ந்தாலும் அவர்கள் நித்தம் எதிரியின் போரை எதிர்கொண்டனர், இருப்பினும் நின்மதியாகவே வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சொந்த தாய்மடியாம் தமிழீழத் தாய் நாட்டில். அவர்கள் சுதந்திரக்காற்றை சுவாசித்தனர். அவர்களை அவர்களே ஆண்டனர். அவர்களை அடக்கி ஆழ எவரும் இல்லை. தமிழர் அனைவரும் பல வருடங்களுக்குப்பிறகு தமக்கே உரித்தான வீரத்துடனும் விவேகத்துடனும் தலை நிமிர்ந்து வாழ்ந்தனர். அந்த தேசம் இன்று உலகவல்லாதிக்க நாடுகளின் துணையோடு இனவாத சிங்களத்தால் அளிக்கப்பட்டுள்ளது. தமிழர் நாம் ஒன்றாய் இணைந்து மீட்டெடுப்போம் எம் தாயகத்தை. எம் மக்கள் மீண்டும் சுதந்திரமாய் நிமிர்ந்துவாழ வழி செய்வோம். தமிழர் நாம் மீண்டும் எமக்கே உரித்தான வீரத்துடனும் விவேகத்துடனும் தலை நிமிர்ந்து வாழ, வேண்டும் எம் தமிழீழ தேசம்.