விடுதலைப்புலிகளை எக்காலத்திலும் அழிக்க முடியாது என்று சென்னையில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் வாதிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய போதிய காரணங்கள் உள்ளனவா? தடையை விலக்கிக் கொள்ளலாமா? என்பதை விசாரிக்க சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது. விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு தரப்பின் சார்பில் சிவகங்கை மாவட்ட கியூ பிரிவு ஆய்வாளர் சந்திரசேகரன், கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், சென்னை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முகமது அஷ்ரப் மற்றும் திண்டுக்கல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா?
நீதிபதி விக்ரம்ஜித் சென், "விடுதலைப்புலிகள் அமைப்பு இருக்கிறதா அழிக்கப்பட்டு விட்டதா?'' என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த வைகோ, "விடுதலைப் புலிகளை எக்காலத்திலும் முற்றிலுமாக அழித்துவிட முடியாது. அவர்கள் லட்சியத்தை வெல்வார்கள்'' என்று கூறினார். இதே கருத்தை பழ. நெடுமாறனும், வழக்கறிஞர் சந்திரசேகரனும் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் பாஸ்கரன், நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது வைகோ எழுந்து, "அக் கூட்டத்தில் சீமான் இலங்கையில் தமிழர்கள் சிங்கள அரசால் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். அதைக் கண்டிக்கிறேன் என்று பேசியது சாட்சிக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். சாட்சி, "தெரியும்!'' என்று சொன்னார். அதேபோன்ற கருத்தை மற்றொரு பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதனால் கைது செய்யப்பட்டு தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியுமா?" என்று கேட்டார். சாட்சியோ தனக்குத் தெரியாது என்று சொன்னார்.
முன்னதாக, தீர்ப்பாய கூட்டத்திற்கு வந்திருந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மட்டுமே முறையிடலாம். அவர்கள் சார்பில் வைகோவும், பழ.நெடுமாறனும் ஆஜராக அனுமதிக்க கூடாது என்று நீதிபதியிடம் வாதிட்டார்.
டெல்லியில் நவ 1-ல் விசாரணை:
அதற்கு நீதிபதி விக்ரம் ஜித், "அவர்களை ஆஜராக அனுமதிக்கவில்லை, கருத்து சொல்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வேண்டுமானாலும் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்'' என்றார். உடனே சுப்பிரமணிய சாமி, "மத்திய மந்திரி ஆ.ராசா தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி செல்ல வேண்டியுள்ளது. எனது கருத்துகளை மனுவாக சமர்ப்பிக்கிறேன்," என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
தீர்ப்பாயத்தின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் நடக்கிறது.
நிச்சயம் தடை அகலும்! - வைகோ
விசாரணை முடிந்து வெளியில் வந்த வைகோ, "நிச்சயம் புலிகள் மீதான தடை அகலும் நம்புகிறேன். புலிகளுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் இப்போது யாராலும் கூற முடியாது. எனவே தடை நீங்கும். இந்தியா வரும் ஈழத் தமிழரின் இன்னலும் நீங்கும்," என்றார்.
No comments:
Post a Comment