Wednesday, July 11, 2007

உங்களுக்கும் கீழான மக்களின் உரிமைகளைப் பறிக்காதீர்கள் : கோ.சுகுமாரன்

'‘நீயெல்லாம் செத்தா சந்நியாசித் தோப்பு சுடுகாட்டுல தான்டா புதைப்பேன்!’’ என்னை, நான் ஒரு சேகுவேரா போல நினைத்துக்கொண்டு அலைந்த மாணவப் பருவத்தில், என் அப்பா இப்படித்தான் திட்டுவார். காரணம், சந்நியாசித் தோப்பு சுடுகாடு... பாண்டிச்சேரியில் அனாதைப் பிணங்களைப் புதைக்கிற இடம். தான்தோன்றித்தனமாகத் தன் பையன் திரிகிறானோ என்ற பயம், கவலை, கோபம் அவருக்கு. ஆனால், இன்று அப்பா இருந்திருந்தால், எல்லா வகையிலும் நான் சரியாகத்தான் வாழ்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு இருப்பார்.

பள்ளிப் பருவத்தில், ஈழப் பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்தது. மொத்தத் தமிழகமும் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்தளித்த காலத்தில், ‘இந்திய அரசே! இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பு. இல்லாவிட்டால் எங்களை அனுப்பு’ என்றெல்லாம் நாங்களும் போஸ்டர் ஒட்டிப் போராடுவோம்.

பள்ளிப் படிப்பை முடித்து, தாகூர் கலைக் கல்லூரியில் சேர்ந்தபோது பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலனின் நட்பு கிடைத்தது. மொழி, இனம், நாடு என்று தமிழ்த் தேசிய நலன்களைப் பேணும் கொள்கைகளைத் தீவிரமாக நானும் ஆதரித்தேன். தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் தமிழரசனின் தொடர்பு கிடைத்தது. பெரியவர் புலவர் கலியபெருமாளின் வழிகாட்டுதலில் தனித் தமிழ்க் கொள்கைகளை வலியுறுத்தி அமைப்பு கட்டினோம். 87-ல் பொன்பரப்பி வங்கிக் கொள்ளையில் திட்டமிட்டு தமிழரசன் கொல்லப்பட்ட பிறகும், நாங்கள் தொடர்ந்து இயங்கினோம். ஈழப் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, இந்தியாவும் தலையிட்டது. ஆனால், அது ஈழத் தமிழர்களை விலக்கிவிட்டு, இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டதும் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு.

அப்போது தூர்தர்ஷன் அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவான பிரசாரத்தை முடுக்கிவிட, டி.வி. பெட்டி உடைப்புப் போராட்டம் நடந்தது. சென்னை, கத்திப்பாராவில் இருக்கிற நேரு சிலையை வெடி வைத்துத் தகர்க்கும் முயற்சி நடந்தது. கொடைக்கானல் டி.வி. டவரை குண்டு வைத்துத் தகர்க்கும் முயற்சி நடந்தது. இந்த இரண்டு வழக்கிலும் பொழிலனுடன் என்னையும் சேர்த்துக் கைது செய்தது காவல் துறை. 18 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து நாங்கள் விசாரிக்கப்பட்டோம். பின்னர், நான் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டேன்.

மக்கள் பங்கு பெறாத எந்தப் புரட்சியும், அதை யாருக்காக நடத்துகிறோமோ அவர்களுக்கே பயன்படாமல் போய்விடும். சிறு குழுக்களின் ஆயுதத் தாக்குதல் முயற்சிகளெல்லாம் மக்கள் ஆதரவில்லாத குறுங்குழு வாதம் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் 18 நாள் சட்ட விரோதக் காவலில் இருந்த நாட்களும், சிறைச் சாலை அனுபவங்களும் என்னை மனித உரிமையின் பக்கம் திருப்பின. நான், ரவிக்குமார் எல்லாம் சேர்ந்து, 1989-ல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைத் தொடங்கினோம்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் பத்மினிக்குப் பாலியல் கொடுமை நடந்தபோது, சி.பி.எம். கட்சியுடன் இணைந்து நீதி கேட்டுப் போராடினோம். சம்பவம் நடந்த மூன்றாவது நாள், பத்மினியிடம் ஒரு வாக்குமூலம் பதிவுசெய்து அதை ஆயிரக்கணக்கில் அச்சடித்து மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம். அந்த வழக்கில் நாங்கள் பதிவுசெய்த அந்த வாக்குமூலம் ஒரு ரத்த சாட்சியாக இருந்து, பத்மினிக்குத் துன்பம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்ப உதவியாக இருந்தது.

அது போல, ரீட்டாமேரி வழக்கில் பேராசிரியர் கல்யாணியுடன் இணைந்து பணியாற்றினோம். பார்வதி ஷா கொலை வழக்கு, கோதண்டம் என்கிற இளைஞர் காவல் நிலையத்தில் கொல்லப்பட்டது என்று ஏராளமான அத்துமீறல்களில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தன் பங்களிப்பைச் செய்திருக்கிறது.

ஒரு சமூகம் நாகரிகமான முறையில் தன் குடிமக்களை நடத்துகிறதா என்பதை, அந்தச் சமூகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளையும் காவல் துறையையும் வைத்தே அளவிட முடியும் என்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெருமளவு உரிமை மீறல்கள் காவல் நிலையங்களிலோ, காவல்துறையினராலோதான் நடைபெறுகின்றன. சிறைச்சாலைகள் சித்ரவதைக் கூடங்களாக இருக்கின்றன.

புதுவையில், செக்குமேடு என்று பாலியல் தொழிலாளர்கள் வாழும் பகுதி இருக்கிறது. கமலா, கௌரி, மேனகா என மூன்று பெண் ஏஜென்ட்டுகள் பல பெண்களை வைத்து தொழில் செய்து வந்தார்கள். மாதா மாதம் அவர்களிடம் இருந்து மாமூல் வசூலிப்பது போதாதென்று அடி, உதை, சித்ரவதை, வழக்கு என்றும் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களுக்காக நாங்கள் நீதி கேட்டுப் போராடினோம். அவர்களுக்கு மாற்று வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள் அல்லது பாலியல் தொழிலை அங்கீகரியுங்கள் என்றோம். பாலியல் தொழிலை அங்கீகரிப்பதா என்று பலருக்கு அதிர்ச்சி!

படிப்பறிவில்லாத ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டால், தங்கள் அனுபவத்தில் இருந்து அவர்கள் மற்றவரின் உரிமை பாதிக்கப்படும் போது நிச்சயம் குரல் கொடுப்பார்கள். அத்தியூர் விஜயா இப்போது தன்னைப் போல பாதிக்கப்படுகிற பெண்களுக்காகக் குரல் கொடுக்க, காவல் நிலையங்களுக்குப் போகிறார். காவலர்கள் அவரை இப்போது மிக மரியாதையோடு நடத்துகிறார்கள். இதுதான் மனித உரிமையின் மகத்துவம்!

கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டபோது, அவரை விடுவிக்க பழ.நெடுமாறன், கல்யாணி, நக்கீரன் கோபால், நான் எல்லோரும் காட்டுக்குள் போனோம். ராஜ்குமார் மீட்கப்பட்டார். இப்போது வீரப்பனைக் கொன்றாகிவிட்டது. ஆனால், வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு சதாசிவம் கமிஷன் வழங்கச்சொன்ன நஷ்டஈட்டை இன்னும் முழுமையாகக் கொடுக்கவில்லை.

மரண தண்டனை, என்கவுன்ட்டர்கள், சட்டவிரோதக் காவல் சித்ரவதைகள், சாதிக் கொடுமைகள், பெண்கள் மீதான வன்முறை, குழந்தைகள் மீதான வன்முறை என இடத்துக்கு இடம் வன்முறையின் வடிவம் மாறுகிறது. இதுபற்றிய விழிப்பு உணர்வு பரவினால்தான், மக்களிடையே எழுச்சி ஏற்படும்.

நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் முகமது அப்சல் உட்பட யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்கிறோம். காந்தியைக் கொன்ற கோட்சே இன்றைக்கு இருந்திருந்தாலும், கோட்சேவுக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்லியிருப்போம். காரணம், காந்தியே தூக்குத் தண்டனையை எதிர்த்தார். தவிர, தண்டனையின் நோக்கம் குற்றவாளியைத் திருத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அரசும் பதிலுக்கு ஒரு கொலையைச் செய்யக் கூடாது!

இதைச் சொன்னால், விபசாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தேசத் துரோகிகளுக்கும் ஆதரவாகப் பேசுவதா எனச் சிலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ரௌடிகள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள், தீவிரவாதிகள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கும் நம்மைப் போல மனித உரிமைகள் உள்ளன. அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்கிறோம்.

சமீபத்தில், மும்பையில் என்கவுன்ட்டர்களுக்கு எதிரான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் தீர்க்கமாகச் சில விஷயங்களைப் பேசினோம். அது தமிழ்ச் சூழலுக்கும் பொருந்தும். ரௌடிகளை ஒழித்துவிட்டால், ரௌடியிசமே ஒழிந்துவிடும் என நினைப்பது தவறானது. காரணம், இங்கே ரௌடியிசம் என்பது அரசியலுடன் கலந்திருக்கிறது அதன் ஆணி வேரைக் கண்டுபிடித்துச் சரி செய்யாமல், ரௌடியிசத்தை சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்ப்பதால் ஒரு பயனும் ஏற்படாது!

வாழ்வியல் அறம்

அதிகாரத்துக்குப் பயப்படாமல், நேர்மையாக உண்மைகளைப் பேசுவது!

ரோல் மாடல்!

ஆந்திராவில், நக்சலைட்டுகளுக்கும் ஆந்திர அரசுக்குமிடையில் பாலமாகச் செயல்படும் மனித உரிமைப் போராளியான டாக்டர் கே.பாலகோபால்!

எதிர்காலக் கனவு!

மனித உரிமைகள் என்றாலே என்னவென்று தெரியாத மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்!

பிடித்த நபர்

தந்தை பெரியார்!

இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது...

உங்களுக்கு உரிமைகள் இருப்பதை உணருங்கள். அதை யாருக்காகவும் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களுக்கும் கீழான மக்களின் உரிமைகளைப் பறிக்காதீர்கள். அவர்களுக்குக் கைகொடுங்கள்!

பேட்டி கண்டவர்: டி.அருள் எழிலன்
படங்கள்: கே.ராஜசேகரன்

நன்றி: ஆனந்த விகடன்
www.kosukumaran.blogspot.com

No comments: