பாதித் தலைமுடி நரைச்சாச்சு;
பாழும் கனவுகள் கலைஞ்சாச்சு;
காதல் கணவனும் வரவில்லை-என்
கல்யாணமும் கை கூடவில்லை.
வந்த மாப்பிள்ளையோ குறைவில்லை;
சென்ற மாப்பிள்ளைகள் கணக்கில்லை-பொய்
காட்சிக்கு அடிக்கடி அலங்காரம்
கல்யாண சந்தை வியாபாரம்.
உள்ளம் வெறுத்து போயாச்சு-என்
உணர்வுகள் மறுத்து நாளாச்சு;
இதயம் வெடித்து துடிக்கிறது-என்
இளமையை இயற்கை தின்கிறது.
மாப்பிள்ளை நாடகம் முடிஞ்சாச்சு;
முதிர்கன்னி நிலைக்கு போயாச்சு;
நகைகள் வாங்க முடியாமல்-வெள்ளி
நரைகள் வாங்கி நிற்கின்றேன்.
இனி ஏனடா இந்தக் கொடுமை?
மாறுமா பெண்கள் நிலைமை?
No comments:
Post a Comment