Tuesday, August 14, 2007

தினமணி முன்னாள் ஆசிரியர் மறைவு


அரை நூற்றாண்டுப் பத்திரிகையாளரின் மறைவு!

ஏ.என்.சிவராமனுடன் இராம.திரு.சம்பந்தம்(வலது)


பத்திரிகை உலகில் ஜூனியர், சீனியர் என வயது வித்தியாசமின்றி அனைவராலும் "ஆர்எம்டி' என்றழைக்கப்பட்ட அரை நூற்றாண்டு கால பத்திரிகையாளரான இராம.திரு.சம்பந்தம் இப்போது நினைவாகி விட்டார்.

இளம் வயதில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கி பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து, ஒரு நாளிதழின் மிக உயர்ந்த பொறுப்பான ஆசிரியர் பதவி வரை உயர்ந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதக்கூடிய வல்லமை பெற்றவர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர், மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கி, மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.ஏ. முடித்தார்.

பி.ஏ. தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாகவே, தனது 22-வது வயதில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய "தமிழ்நாடு' நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும் சென்னையிலும் 4 ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தார்.

பின்னர், 1960-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீஸில்' இணைந்து சுமார் ஓராண்டு பணியாற்றினார்.

இந்தச் செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, 1961-ல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியில் சேர்ந்தார்.

கடும் உழைப்பாளியான இவர், படிப்படியாக முதுநிலைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர் மற்றும் செய்திப் பிரிவுத் தலைவர் என்ற நிலைகளுக்கு உயர்ந்தார்.

பின்னர், "தினமணி'யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றி, 2004-ல் தனது 69-வது வயதில் ஓய்வு பெற்றார்.

தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை "தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார்.

கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளரும்கூட. தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளிவந்தார்.

இராம. திருஞானசம்பந்தம் என்ற தனது பெயரையும் இராம. திரு. சம்பந்தம் என்று மாற்றிக்கொண்டார். தமிழ் உணர்வாளர்.

இவர் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் "தினமணி'யில் வெளியிடப்பட்ட செய்திகளின் விளைவாகப் பெற்ற உதவிகளின் மூலம் பல நூறு ஏழை எளிய மாணவ, மாணவிகள், மருத்துவம், பொறியியல் உள்பட உயர்கல்வி பெற்றனர்.

பெங்களூர் அருகே இலங்கைத் தமிழ்க் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த இல்லத்தின் பரிதாப நிலைமை பற்றித் தினமணியின் முதல் பக்கத்தில் இவரால் வெளியிடப்பட்ட செய்தி, தினமணி வாசகர்களிடமிருந்து பல லட்சங்களை உதவியாகத் திரட்டித் தந்தது.

செறிவான விஷயங்களைக் கொண்ட சிறப்பு மலர்களை ஒரு நாளிதழால்தான் மிகச் சிறப்பாக வெளியிட முடியும் என "தினமணி'யில் சிறப்பு மலர்களை வெளிக்கொண்டுவந்தார்.

பொங்கல் மலர், மருத்துவ மலர், மகளிர் மலர், மாணவர் மலர், தீபாவளி மலர், ரமலான் மலர், கிறிஸ்துமஸ் மலர் என ஆண்டுதோறும் மலர்ந்தன.

விளம்பரத்தை விரும்பாமல் சேவை உள்ளத்துடன் செயல்படும் சமூக சேவகர்களை அடையாளம் கண்டு, பிரமாதமாகச் செய்திகளை வெளியிட்டு ஊக்குவித்தவர்.

ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த காலத்தில் தமிழுக்கு எத்தனையோ நல்ல, புதிய சொற்கள் அறிமுகமாக, நல்ல தமிழ் நாளிதழான "தினமணி', சம்பந்தம் காலத்தில் தமிழர் நாளிதழாகிக் கூடுதல் வாசகர் பரப்பை எட்டியது.

நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர், மனிதாபிமானம் மிக்கவர். பத்திரிகையாளர்களுக்குப் பயண அனுபவம் அவசியம் என்பதற்காகவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் மாநாடுகளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் அனைத்து நிலைகளிலுமுள்ள பத்திரிகையாளர்களை அனுப்பிவைத்தார்.

செய்திகளைத் தரும்போது முழுமையாகவும், அதே சமயம் தெளிவாகவும், சுருக்கமாகவும் எப்படித் தருவது என்பதை தனது அனுபவத்திலிருந்தே எளிமையாகக் கற்றுத் தந்தவர். சக பத்திரிகையாளர்களின் குடும்ப விஷயங்களைக் கூட விசாரித்து, சுக-துக்கங்களில் பங்குகொண்ட தோழர்.

காலையில் கண் விழித்தது முதல் இரவில் உறங்கச் செல்லும் வரை செய்தி, பத்திரிகை, அலுவலகம் என்றே தன் வாழ்நாளைக் கரைத்தவர்.

"பத்திரிகையாளன் என்பவன் 365 நாள்களும் இருபத்திநாலு மணி நேரமும் பத்திரிகையாளன்தான்; காலநேரமெல்லாம் அவனுக்குக் கிடையாது' என்று கற்பித்து அவரும் அவ்வாறே வாழ்ந்தார், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட.

பகல் 11 மணி முதல் இரவு 11 வரை அலுவலகம்தான் வாழ்க்கை. "ஆண்டுதோறும் விடுமுறை விட்டேதீர வேண்டிய மூன்று நாள்களும்தான் எனக்குக் கடினமான நாள்கள்' என்பார் சக பத்திரிகையாளர்களிடம்.

பொது நிகழ்ச்சிகள், மேடைகளை எப்போதுமே தவிர்த்து வந்தவர்.

இவரால் உருவாக்கப்பட்ட எண்ணற்ற பத்திரிகையாளர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவரின் மறைவின்போது, அந்த நகரின் தினமணி நிருபரிடம் "ஏம்ப்பா, அவருடைய படம் இருக்கிறதா?' என்று கேட்டு, இல்லை என்றதும், "அவர் சீரியசாக இருக்கும்போதே அதையெல்லாம் தயார்செய்து வைக்காமல் என்ன நிருபரப்பா?' என்றவர் சம்பந்தம்.

மிகவும் உடல்நலம் குன்றத் தொடங்கிய நிலையில், தன் மறைவுக்குப் பிறகு தகவலுக்காக எந்த நிருபரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, தன்னைப் பற்றியே ஒரு குறிப்பு -அவருக்குப் பிடித்த கறுப்பு மையிலேயே -எழுதிவைத்திருந்தார் ஆர்எம்டி.

நன்றி: தினமணி.

1 comment:

முனைவர் அண்ணாகண்ணன் said...

இராம.திரு சம்பந்தம் அவர்களை நான் சந்தித்துள்ளேன். எளிமையாகப் பழகினார். அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.