Monday, November 12, 2007

கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் வலைப்பதிவுகள்

கணினியில் வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கணினியைத் தமிழில் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இணைய உலகில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகளில் எழுதுவதற்கான வசதிகளை பிளாக்கர்.காம், வேர்ட்பிரஸ்.காம் உள்ளிட்ட பல தளங்கள் இலவசமாக வழங்குகின்றன. யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரில் இலவசமாக வலைப்பதிவுகளை ஆரம்பித்து தங்கள் கருத்துகளை எழுத முடியும். தங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும். உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை இதில் விவாதிக்க முடியும். கதை, கவிதை, கட்டுரை, திரைவிமர்சனம் என எழுதலாம்.

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள தமிழ்த் திரட்டிகள் உள்ளன. இவைகள் இலவசமாக வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கின்றன. இதற்காகத் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழூற்று உள்ளிட்ட திரட்டிகள் செயல்படுகின்றன. எழுதுபவர்கள் இந்தத் திரட்டிகளில் தங்கள் வலைப்பதிவுகளை இணைத்துக் கொண்டால் ஒரே இடத்தில் உலகில் உள்ள அனைவரும் படிக்க முடியும்.

தமிழ்மணம் திரட்டியில் 2354 பேர் தங்கள் பதிவுகளை இதுவரை இணைத்துள்ளனர். இதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 143 பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இதேபோல் தேன்கூட்டில் 1874 பேர் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளனர். இந்திய மொழிகளில் தமிழில்தான் வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வசதி வாய்ப்புகள் இருப்பதால் கணினியில் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இயங்குதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பலருக்குத் தேவை.

புதுச்சேரியில் இந்த வலைப்பதிவுகள் குறித்தும், கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைக் கொண்டு செல்வது, இது தொடர்பான இயங்குதளங்களையும், தமிழ் மென்பொருள்களையும் அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பதிவுகளில் தமிழைப் பயன்படுத்துவது போன்றவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல உள்ளது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன்.

இதற்காக இவர்கள் டிசம்பர் 9-ம் தேதி ஒருநாள் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளனர். இதில் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்கிறார். இந்த அமைப்பைத் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணினி நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களில் தமிழின் பங்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற பயிற்சி பட்டறைகள் இதற்கு வலு சேர்க்கும்.

விழிப்புணர்வை ஏற்படுத்த புதுவையில் புதிய அமைப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரியில் நடைபெறும் வலைப்பதிவர் பயிற்சி பட்டறையில் பங்கேற்க வலைப்பதிவில் உள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்வது வரவேற்கப்படுகிறது.

இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் டிச.9-ம் தேதி தமிழ்க் கணினி - வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது. ஒரு நாள் நடைபெறும் இப் பயிற்சி பட்டறையில் தமிழக அளவில் கணினி அறிஞர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கின்றனர்.

கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு போதிய பயிற்சி அளிப்பதற்காக இப் பயிற்சி பட்டறையை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் நாங்கள் நடத்துகிறோம்.

இப் பயிற்சி பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு தேவையான தமிழ் மென்பொருள்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்படும். மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் பயிற்சி பட்டறையில் 100 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். கணினியை பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளோம். பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க விரும்புவோர் முன் பதிவு செய்வது அவசியம். பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதுமானது.

பயிற்சி பட்டறையில் பங்கேற்க விரும்புவோர்

http://puduvaibloggers.blogspot.com

என்ற வலைதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு செல்: 94431 05825 என்ற கைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

நன்றி : தினமணி 12.11.2007

No comments: