திரைப்படங்களில் காட்சியாக்கப்படும் கற்பனை கதையை நிரூபிக்கும் உண்மைக் கதை இது. அதுவும் தேசத்துக்கு ஓர் அவமானத்தைத் தேடித் தந்துள்ள கடத்தல். மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தல், லாரியில் அரிசி கடத்தல் என்று கேள்விப்பட்டுள்ளோம். இது போன்ற வாகனங்களில் கடத்தல் பொருள்களை ஏற்றி அனுப்பினால் வழியில் போலீஸ், கலால்துறை அதிகாரிகளின் தொந்தரவு இருக்கும். ரயிலில் ஏற்றி அனுப்பினால் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேரும். மேலும் ரயிலில் சரக்குச் செல்வதால் கடத்தல் தொழிலுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துவிடும்.
இப்படித்தான் புதுச்சேரியிலிருந்து ரயிலில் 3 முறை அரிசி சென்றுள்ளது. அது கடத்தலா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. இப்போது 4-வது முறையாக ரயிலில் ரேஷன் அரிசி ஏற்றி அனுப்பும்போது 2400 டன் அரிசி சிக்கியது. ஏற்கெனவே 3 முறை அனுப்பும்போதும் ஒவ்வொரு முறையும் இதே அளவு அரிசி ரயிலில் சென்றுள்ளது.
இப்போது ஆந்திர மாநிலம் காக்கி நாடா பகுதியிலுள்ள பிக்காலூரூ என்ற இடத்துக்குக் கடத்த முற்பட்டபோது பிடிபட்டுள்ளது.
ஏற்கெனவே 2 முறை குவாஹாட்டிக்கும், ஒரு முறை வங்கதேசத்துக்கும் இதுபோல சரக்கு ரயிலில் அரிசி சென்றுள்ளதை ரயில்வே வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
ஏற்கெனவே வெளிநாட்டுக்குச் சென்ற அரிசி பாகிஸ்தான் நாட்டுக்கும் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் "தினமணி' நிருபரிடம் கூறினார்.
மேலும் ஏற்கெனவே எடுத்துச் செல்லப்பட்ட அரிசியும் ரேஷன் அரிசிதான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் சரக்கு ரயிலில் சர்வதேச அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
குடிமைப் பொருள் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக கடந்த 11 நாள்களாக அரிசி மூட்டைகளைச் சுமந்து கொண்டு சரக்கு லாரி புதுச்சேரி ரயில் நிலையத்திலேயே நிற்கிறது.
ரேஷன் அரிசி ஏது?:சென்னை சேத்துப்பட்டு பகுதியில் 7, மேயர் சுந்தரமூர்த்தி சாலையில் "அனந்தம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் செயல்படுவதாகவும், இந்த நிறுவனம் அரிசி வியாபாரம் செய்வதாகக்கூறியும் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ரூ.10 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இப்போது அந்த முகவரியில் இந்த நிறுவனம் செயல்படவில்லை என்று போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர், தன் பெயரில் ரூ.5 கோடியும், நிறுவனத்தின் பெயரில் ரூ.5 கோடியும் 2005-ம் ஆண்டு இந்த வங்கியின் மும்பை பகுதி கிளையிலிருந்து கடன் பெற்றுள்ளார். கடனைத் திருப்பிக் கொடுக்காத நிலையில் இந்த வங்கி வசூல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
வசூலித்துக் கொடுக்க மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலாட்ரல் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட் (சஹற்ண்ர்ய்ஹப் இர்ப்ப்ஹற்ங்ழ்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் கற்க்.) என்ற நிறுவனத்துடன் இந்த வங்கி ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஹைதராபாத்தில் ஒரு கிளையும் இருக்கிறது.
இந்த ஒப்பந்தம் முறையற்றது என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக இந்த வங்கியின் அதிகாரிகள் அளித்த ஆவணங்கள் எதுவும் தங்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து முதல் கட்டமாக நேஷனல் கொலாட்ரல் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.
இடைத்தரகு வேலை: நேஷனல் கொலாட்ரல் நிறுவனம் இந்த தனியார் வங்கிக்கு இடைத்தரகு வேலை செய்து கொடுத்துள்ளது.
கடனைத் திருப்பிக் கொடுக்காத சென்னையைச் சேர்ந்த நிறுவனம் புதுச்சேரியில் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த 2 கிடங்குகள் இவர்கள் கைவசம் வந்தன. தனியார் வங்கியின் ஒத்துழைப்புடன் கடந்த ஓராண்டாக இந்த 2 கிடங்குகளுக்கும் இவர்களே வாடகை கட்டி வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த 2 கிடங்குகளில் இருந்த அரிசியையும் விற்பனை செய்து அந்தப் பணத்தை இந்தத் தனியார் வங்கியிடம் அளிப்பதுதான் கொலாட்ரல் நிறுவனத்தின் இடைத்தரகு வேலை.
புதுச்சேரியில் 2 கிடங்குகளில் இருந்த அரிசியை பெங்களூரில் உள்ள பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளனர். இதை வாங்கிய பி.ஆர்.எஸ். நிறுவனம் ஆந்திரத்துக்கு இந்த அரிசியை எடுத்துச் செல்ல தனியாக சரக்கு ரயிலை புக்கிங் செய்துள்ளது. சரியான நேரத்தில் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததால் இப்போது சிக்கியது. முறையாக விலாசம் இல்லாத ஒரு நபருக்கு, விற்பனை வரி செலுத்துபவரா, என்ன வியாபாரம் செய்கிறார் என்கிற விவரங்கள் எதையும் கேட்காமல், தகுந்த ஈடு எதுவுமே இல்லாமல் பத்து கோடி ரூபாய் வரை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் கொடுத்தது எப்படி? நாளைக்கே கள்ளக்கடத்தல் போல, போதைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கும், வெடிமருந்து விநியோகம் செய்வதற்கும் கேள்வி எதுவும் கேளாமல் இந்தத் தனியார் வங்கிகள் கடன் கொடுக்காது என்று என்ன நிச்சயம்?
உணவுப் பொருள் தடுப்புப் பிரிவுப் போலீஸ் கண்காணிப்பாளர்களும், குடிமைப் பொருள் அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிந்ததும், முதலில் இந்தச் சரக்கு எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடிய ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பெங்களூர் பிரிவு மேலாளர் மாயமாய் மறைந்தது ஏன்? இப்போது எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நேஷனல் கொலாட்ரல் மேனேஜ்மெண்ட் சர்வீஸஸ் நிறுவனத்தைக் கைகாட்டுவது ஏன்? பத்து கோடி ரூபாய் கடன் கொடுத்தது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியா அல்லது அவர்களது இடைத்தரகு நிறுவனமா?
புதுச்சேரி அரசின் ரேஷன் அரிசி கடத்தப்படவில்லை என்றால், அந்த அரிசி தமிழகத்திலிருந்துதான் கடத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு - புதுச்சேரி எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளில் ஏன் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படவில்லை. சோதனை செய்யாமல் இருப்பதுதான் சோதனைச் சாவடிகளின் வேலையா?
இந்தக் கடத்தல் பாடத்துக்குப் பிறகு நாம் கேட்கும் இன்னொரு கேள்வி இதுதான்:- ரயில்வே இன்னும் தனியார் மயமாகவில்லைதானே?
யார் இந்த அரிசி வியாபாரி?
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம்தான் ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர் அவர் பெயரில் ரூ.5 கோடியும், இந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.5 கோடியும் இந்த வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளார்.
அவர் கொடுத்திருந்த சேத்துபட்டு முகவரி போலியானது என்று உணவுப் பிரிவு போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தைப் பிடிக்க தனிப்படை போலீஸôர் சென்னை விரைந்துள்ளனர். ஆறுமுகத்துக்குப் பின்னணியில் பல முக்கிய முகங்கள் மறைந்திருக்கும் என்றும் போலீஸôர் கூறுகின்றனர்.
மீதியிருக்கும் அரிசி எவ்வளவு?
புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்டுள்ள 2 கிடங்குகளில் ரயிலில் ஏற்றியது போக மீதி 1800 டன் அளவுக்கு அரிசி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
அரிசி எங்கிருந்து வந்தது?
பிடிபட்டது ரேஷன் அரிசிதான். ஆனால் அது புதுச்சேரிக்கு எங்கிருந்து வந்தது?
புதுச்சேரி ரேஷன் கடைகளில் இது போன்ற ரேஷன் அரிசி போடுவதில்லை என்றும், இலவச அரிசி திட்டத்துக்கு வெளிமார்க்கெட்டில் இருந்துதான் புதுச்சேரி அரசு அரிசி வாங்கி மக்களுக்குக் கொடுக்கிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரிசியுடன் அலைந்த அதிகாரிகள்
புதுச்சேரியில் பிடிபட்ட இந்த அரிசியை நாங்கள் சோதனை செய்து கொடுக்க முடியாது என்று விழுப்புரத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான பரிசோதனைக் கூடத்தில் சொல்லிவிட்டதாக போலீஸôர் கூறுகின்றனர். எங்கள் மாவட்டத்தில் இது போன்ற பிரச்னை வந்தால்தான் சோதனை செய்வோம். வேறு இடத்தில் சிக்கிய அரிசியை சோதனை செய்யமாட்டோம் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களைத் தாண்டி வேறு மாநிலத்துக்குக் கடத்துவதாக இருந்த இந்த அரிசியைச் சோதனை செய்யச் செல்லும்போது மட்டும் எங்கிருந்தோ வந்துவிட்டது இந்த எல்லைப் பிரச்னை. அதனால் இந்த அரிசியின் மாதிரி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment