ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டி (37) காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
தனது எம்.பி. பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார். அவரது தாயும் ராஜசேகர ரெட்டியின் மனைவியுமான விஜயம்மாவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஜெகன் மோகனின் இந்த திடீர் முடிவால் ஆந்திரத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஜெகன் மோகன் ரெட்டி விலகல் ஆந்திர அரசியல் ஒரு திருப்பமாக கருதப்படுகிறது.
காங்கிரஸ் தலைமை தன்னை இழிவுபடுத்தி,அவமானப்படுத்தியதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஜெகன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்து கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
ஜெகன் மோகனின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது, தவறான வழிகாட்டுதலின் பேரில் அவர் இந்த முடிவு எடுத்துள்ளார் என்று மத்திய சட்ட அமைச்சரும், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி கூறினார்.
அதேநேரத்தில், ஜெகன் மோகன் விலகியதால் ஆந்திர அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ எந்த நெருக்கடியும் இல்லை. தனி மனிதரைவிட கட்சி பெரியது என்று அவர் கூறினார்.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை கட்சி மேலிடம் முதல்வராக்கும் என்று ராஜசேகர ரெட்டி குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் மூத்த தலைவர் ரோசய்யா முதல்வராக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஜெகன்மோகன் தனது ஆதரவாளர்களைத் திரட்ட, கட்சி தலைமையின் உத்தரவையும் மீறி ஆறுதல் யாத்திரையைத் தொடங்கினார். தனது தந்தை உயிரிழந்தபோது தற்கொலை செய்து கொண்டவர்கள், அதிர்ச்சியில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கான யாத்திரை என்ற பெயரில் அவர் ஆந்திர முழுவதும் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். அதோடு முதல்வர் ரோசய்யாவுக்கு மறைமுகமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தனது சாட்சி பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலம் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை விமர்சித்து வந்தார்.
ஜெகன் மோகன் கொடுத்த நெருக்கடி, தெலங்கானா தனி மாநில போராட்டம் போன்ற காரணங்களால் முதல்வர் பதவியிலிருந்து விலக ரோசய்யாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சட்டப் பேரவைத் தலைவராக இருந்த கிரண் குமார்ரெட்டி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜெகன் மோகனின் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கைகளில் கட்சி மேலிடம் ஈடுபட்டது. அதற்கேற்ப ராஜசேகர ரெட்டியின் சகோதரருக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது.
ஏற்கெனவே தனது சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டியை முதல்வராக்கியதோடு தனது சித்தப்பா ஓய்.எஸ். விவேகானந்த ரெட்டிக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்ததால் கட்சியில் இருந்து விலக முடிவு செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி.
புதிய கட்சி
விரைவில் அவர் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சியை தனது தந்தையின் பெயரைக் கொண்டு "ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்' என தொடங்க உள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
சோனியா மீது புகார்
சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், தனது சித்தப்பாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பது மூலம் தனது குடும்பத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். உங்களை (சோனியா) சந்திக்க நேரம் கேட்டு எனது தாய் விஜயம்மா ஒரு மாதமாக காத்திருந்த நிலையில் நடிகரும், பிரஜா ராஜ்யத் தலைவருமான சிரஞ்சீவி உங்களைச் சந்திக்க நேரம் கேட்டபோது உடனடியாக சந்தித்தீர்கள். இது எங்களை அவமானப்படுத்தியதாகும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தப்புமா?
ராஜசேகர ரெட்டி மரணமடைந்தபோது 140-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது 25 எம்.எல்.ஏ.க்களே ஜெகன் மோகனை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டாலே கிரண்குமார் ரெட்டி அரசு கவிழ்ந்துவிடும். ஆனால் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யத்தின் 18 உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது.
நன்றி: தினமணி
1 comment:
ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்.
http://arulgreen.blogspot.com/
Post a Comment