Friday, September 25, 2009

நாளை வருவன் ஒரு மனிதன்



புரட்சிக்கமால், மட்டக்களப்பு

நாளை வருவன் ஒரு மனிதன்;
ஞாலத் திசைகள் கோலமிட
நாளை வருவன் ஒரு மனிதன்.

உள்ளத் தெளிவின் நிலவினிலே
ஒளிரும் நினைவாம் சுடரினிலே...
வெள்ளப் புனலின் கலப்பினிலே
விடியற் பரிதி உருவினிலே
நாளை வருவன் ஒரு மனிதன்!

காலச் சுழலின் சுழிதனிலே
கலந்து சுழலும் மேதையரின்
கோலக் கனவின் கருக்குழியில்
கோடி காலம் குடியிருந்தான் ...
நாளை வருவன் ஒரு மனிதன் !

மாநிலத்துக் கழனியினை
மாற்றி யுழக்கி வரப்பிட்டு
ஏணி பெற்ற வாழ்க்கையினை
எரிவிட்டாக்கும் நல்லுழவன் ...
நாளை வருவன் ஒரு மனிதன்!

சாதி ஒன்றாய் நிறமொன்றாய்
சமயம் ஒன்றாய் மொழியொன்றாய்
நீதி ஒன்றாய் நிலையொன்றாய்
நிரைகண் டாளும் விஞ்ஞானி
நாளை வருவன் ஒரு மனிதன்!

வானக் கூரைப் பந்தலின் கீழ்
வையகத்துப் பெருமனையில்
மானிடத்தின் பிள்ளைகளை
மருவி மகவாய் விருந்தோம்ப...
நாளை வருவன் ஒரு மனிதன்!

No comments: