Wednesday, May 16, 2007

விலைமகளின் கண்ணீர்

கவிஞர் தராபாரதி

பூப்பறியாத பருவத்திலே
பொதுமகளாய் போனவள் நான்;
யாப்பறியாத கவிதை என்னை
யார் யாரோ வாசித்தார்.

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி;
எல்லா மதமும் கலக்கின்ற
என் மதம் மன்மதம்.

இனிப்புக் கடைநான் தசைப் பிண்டம்;
எல்லோருக்கும் திண்பண்டம்;
குனிந்து வருகிற நீதிபதி;
குற்றவாளியும் அடுத்தபடி.

தனயன் நுழைய முன் வாசல்;
தந்தை நழுவ பின் வாசல்;
முனிவர்களுக்கும் முறைவாசல்;
மூடாதிருக்கும் என் வாசல்.

மந்திரவாதியின் கைக்கோல் நான்;
மந்திரிமார்களுக்கும் வைக்கோல் நான்;
அந்தப்புறங்கள் சலித்தவருக்கு
அசைவ மனைவி ஆனவள் நான்.

நித்தம் ஒரு கணவன் குறைவில்லை;
நிரந்தரக் கணவன் வரவில்லை;
புதுமணப் பெண்போல் தினம்தோறும்;
பொய்க்கு இளமை அலங்கரம்.

தத்துவ ஞானிகள் மத்தியிலே
தசையவதானம் புரிகின்றேன்;
உத்தம புத்திரர் பலபேர்க்கு
ஒரு நாள் பத்தினி ஆகின்றேன்.

மேடையில் பெண்ணறம் பேசிய பின்- வந்து
மேதையும் என்னை தொட்டனைப்பான்;
நான் ஆடைகள் கட்ட நேரமின்றி
ஆண்களை மாற்றி கட்டுகிறேன்.

கூவம் நதிநான் தினம்தோறும்
குளித்த பிறகும் அழுக்காவேன்;
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்து பைசா கற்பூரம்.

உப்பு விலைதான் என் கற்புவிலை;
உலை வைக்கத்தான் இந்த நிலை;
தப்புதான் விட முடியவில்லை
தருமம் சோறு போடவில்லை.

-கவிஞர் தாராபாரதி
நன்றி: இது எங்கள் கிழக்கு.

No comments: