Thursday, June 12, 2008

கவலைக்கிடமான நிலையில் அணுசக்தி ஒப்பந்தம்

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற உள்நாட்டு அரசியல் தடுக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அயல்நாட்டு பணிக்கு நியமிக்கப்பட்ட இந்திய அதிகாரிகளை தனது வீட்டில் சந்தித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது தேச நலன் காக்கப்பட்டுள்ளது. நமது பாதுகாப்புக்காக அணு சக்தியைப் பயன்படுத்த அந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு நிறைவேற்ற நமது உள்நாட்டு அரசியல் தடுக்கிறது. இனி வரும் மாதங்களில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அணு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான எரிபொருளை மற்ற நாடுகள் இந்தியாவுக்குத் தருவதில்லை. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே மற்ற நாடுகளிடம் இருந்து எரிபொருளை வாங்க முடியும். எனவேதான் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை உருவாக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ரஷியா, பிரான்ஸ் போன்ற அணுசக்தி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் நாடுகளுடனும் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

எண்ணெய் வளம்:

உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் எண்ணெய் வளம் முக்கிய பங்கு வகிக்கும். எண்ணெய் வளம் இருக்கும் நாடுகளைத் தேடி சீனா செல்கிறது. அந்த போட்டியில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடிக்க அங்கெல்லாம் சீனா முதலீடு செய்கிறது.

எண்ணெய் வளத்தை பெறுவதும், உலகின் அதிகாரப் போட்டிகளில் மிக முக்கியமானதாகிவிடும். இப்போது கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதுபோன்ற சிக்கலை உலக நாடுகள் இதுவரை சந்தித்ததில்லை. பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் எண்ணெய் வளத்தைப் பெறுவதற்காக நாடுகளிடையே கடும் போட்டி அதிகரிக்கும். இயற்கை வளம், எண்ணெய் வளம், மின்சாரம் ஆகியவை வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக அமையும்.

எரிசக்தி துறையில் சீனாவிடம் இருந்து இந்தியாவுக்குக் கடும் போட்டி ஏற்படும் என்பதை உணர வேண்டும். வளர்ச்சிக்கான போட்டியில், தேச நலனை நாம் எப்படி காத்துக் கொள்ளப் போகிறோம் என்பது அவசியம் என்றார் மன்மோகன் சிங்.

ஆனால் அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் விடுவதாக இல்லை. அமெரிக்கா நம்பத் தகுந்த நாடு கிடையாது என்று அக் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இந்த ஒப்பந்தம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.