Sunday, October 14, 2007

ஏழைகளின் இரைப்பையை நிரப்புங்கள்

கவிஞர் தாராபாரதி

விதவித மான முன்னேற் றங்கள்
விண்ணைத் தொடுகிற நம்நாட்டில்-பல
வெறும்வயி றுகளோ மண்மேட்டில்!

சுதந்தர தினத்தில் காய்ச்சிய கஞ்சி
சுப்பன் வயிற்றுக்குப் போகவில்லை-அது
சுவரொட் டிக்கே போதவில்லை!

வறுமை தீர்க்கும் வளர்ச்சிப் பணியில்
வாக்குப் பெட்டியில் சோறுவரும்-தினம்
விளம்பரத் தட்டியில் வீடுவரும்!

தருமம் வளர்த்த தாய்த்திரு நாட்டில்
தருமச் சோறு ஒருகவளம்-அது
தவனை முறையில் வரும் அவலம்!

கூரையின் உச்சியில் ஏறிய கட்சிக்
கொடிமரங் களுக்குப் புத்தாடை-தந்தை
கூலியில் வாங்கிய சிற்றாடை!

கூரையின் கீழே சந்ததிகளுக்குக்
கொடியின் நிழலே மேலாடை-தெருக
குப்பைப் புழுதி மெய்யாடை!

`வந்தது விடுதலை' என்பது பாதி
வயிறுக களுக்குத் தெரியாது-அதன்
வாரிசு களுக்கும் புரியாது!

இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டை
இதயங் களிலே எழுதாதீர்- ஏழை
இரப்பை களிலே எழுதுங்கள்!

2 comments:

Divya said...

வறுமையின் கொடுமையை விளக்கும் ஆழமான அழுத்தமான வரிகள்

\சுதந்தர தினத்தில் காய்ச்சிய கஞ்சி
சுப்பன் வயிற்றுக்குப் போகவில்லை-அது
சுவரொட் டிக்கே போதவில்லை!\\

பசியின் கொடுமை.......கொடுமையிலும் கொடுமை!!

எஸ்.ஆர்.மைந்தன். said...

\சுதந்தர தினத்தில் காய்ச்சிய கஞ்சி
சுப்பன் வயிற்றுக்குப் போகவில்லை-அது
சுவரொட் டிக்கே போதவில்லை!\\

திவ்யாவுக்கு, இது கவிதை வரிகள் இல்லை. இன்றை இந்தியாவின் உண்மை. உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி.