Wednesday, December 16, 2015

என் முதல் காதல்

என் முதல் காதல் அவளோடு
சில நேரங்களில் பகலிலும்,
பல நேரங்களில் இரவு மின்னல்
ஒளியிலும் அவள் முகம்
பார்த்திருக்கிறேன்

என் மேல் விழுந்து
மெய்சிலிர்க்க வைத்து
என் உதடு வழி தாகம்
தீர்ப்பவள்
விவரம் தெரியும் முன்பிலிருந்தே
அவளை எனக்கு தெரியும்
பார்க்கும்போது மட்டும் பரவசம் அடைவேன்
கைப்பேசி காதலுக்கு அவள்
ஊரில் வசதியில்லை
நாங்கள் பேசிக் கொள்வது
வருடத்துக்கு சில நாள்கள்
மட்டும்தான்
அவள் வரும்போது முத்தமிட்டும்
காகித கப்பல் விட்டும்
விளையாடுவது உண்டு
அது …. ? இது …..?
சீ …… சீ ….
அப்படியொன்றும் இல்லை.
அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று
நான் புனிதம் காக்கிறேன்.
அவள் என்னை விட்டு
பிரியும்போது எனக்கு
உடல் நலம் சரியில்லாமல் போகிறது
அவள் வருவதைப் பார்த்தால்
எங்கள் வீட்டில் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.
அவளைப் பற்றி கவிதை எழுத
நினைப்பதுண்டு
அவளே கவிதை
அவளைப் பற்றி என்ன
எழுதுவது....
எப்போது திருமணம்?
பொறுங்கள், குழந்தைகளைக் கேட்டு சொல்கிறேன்.
குழந்தைகளா?
இப்பொழுது அவர்கள் தான்
அவளைக் காதலிக்கிறார்கள்.
குழந்தைகள் காதலிக்கிறார்களா...
ஆமாம் மழையை காதலிக்காத
மழலை யாராவது உண்டா?
இப்போது அவர்களுக்கும்
புரிகிறது அவள் மென்மையானவள்
அல்ல கோபப்பட்டால் கொலையும்
செய்வாள் என்று....