Thursday, October 4, 2007

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்-ராமதாஸ் கருத்து


பொது வேலை நிறுத்தம் உள்ளிட்ட பொதுவான பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம் வெவ்வேறு விதமான தீர்ப்பளித்தது குறித்து தேசிய அளவில் பொது விவாதம் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

தைலாபுரத்தில் அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

"மாநிலங்களின் நலனுக்காகவும், மக்களின் முன்னேற்றத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடுவது ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமைகள். இதன் ஒரு அங்கம்தான் வேலை நிறுத்தமும் போராட்டமும்.

கேரளத்தில் 1997-ம் ஆண்டு குறிப்பிட்ட தொழிற்சங்கம், குறிப்பிட்ட பிரச்னைக்காக நடத்திய வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இப்படி ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்காக நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என்ற தீர்ப்பு, தற்போது பொதுவான சட்டமாக மாறியுள்ளது. இதன் விளைவாகத்தான் தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

சட்டங்கள் இரு வகைப்படும். அதில் ஒரு வகை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இயற்றப்படுவது. மற்றொன்று நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் காலப்போக்கில் கடைபிடிக்கப்பட்டு உருவான சட்டங்கள். இவற்றின் தன்மைகள் வேறு. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் காலப்போக்கில் உருவான சட்டங்களை நிலையாக பயன்படுத்தக் கூடாது. அண்மைக் காலமாக நீதிமன்றத் தீர்ப்பு வாயிலாக உருவாகும் சட்டங்கள் அதிகரித்து வருவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

27 சதவீத இடஒதுக்கீடுச் சட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதம், ஆனால் வேலை நிறுத்தம் செய்த நாள்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை முன்மாதிரியாக எதிர்காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

குஜராத் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் சலுகை கேட்டு போராடியபோது இப் போராட்டத்தை தேசிய அவமானம் என்ற அளவுக்கு உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.

இப்படி பொதுவான விஷயங்களில் முரண்பட்ட தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஆகவே இதை தேசிய அளவில் பொது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், சமூக நல ஆர்வலர்கள், துணிந்து தங்களது கருத்தை வெளியிட வேண்டும் என்றார் ராமதாஸ்.

நன்றி: தினமணி