Friday, March 3, 2017

தருமபுரி விவசாயி தற்கொலை: அன்புமணி இராமதாஸ் இரங்கல்

தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை அடுத்த எம்.செட்டிஅள்ளியை சேர்ந்த முனிராஜ் என்ற விவசாயி, வறட்சியால் பயிர்கள் கருகியதை தாங்கிக் கொள்ள முடியாமலும், கடன் சுமையை தாங்க முடியாமலும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் பங்கேற்ற போது தான், முனிராஜின் இறப்பு செய்தி கிடைத்தது. ஒன்றரை ஏக்கரில் கடன் வாங்கி தக்காளி, கால்நடைப்புல் உள்ளிட்ட பயிர்களை முனிராஜ் பயிரிட்டிருந்தார். வறட்சியால் பயிர்கள் கருகியதாலும், கடன் பெற்று வாங்கியிருந்த கால்நடைகள் பால் தராததாலும் முனிராஜுக்கு ரூ.3.00 லட்சம் அளவுக்கு கடன்சுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடனை சமாளிப்பதற்கு வழி தெரியாத முனிராஜ் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடுமையான வறட்சியால் உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், இழப்புகளும் இன்னும் குறையவில்லை என்பதையே இந்த சோக நிகழ்வு காட்டுகிறது.
முனிராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முனிராஜின் தற்கொலையை தனித்த நிகழ்வாக பார்க்காமல் தமிழகத்தில் நடந்து வரும் உழவர்கள் தற்கொலைகளின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். இனியும் இத்தகைய தற்கொலைகள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து உழவர் முனிராஜின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

No comments: